ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 20 பந்துகளில் அரைசதம் விளாசி ஜோஸ் பட்லர் ருத்ரதாண்டவம் ஆடினார். இதன் மூலம் நடப்பு தொடரில் அதிவேகமாக அரைசதம் விளாசிய வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார். அதைதொடர்ந்து ஃபரூகி பந்துவீச்சில் போல்ட் முறையில், 54 ரன்கள் எடுத்திருந்தபோது பட்லர் ஆட்டமிழந்தார்.
ராஜஸ்தான் - ஐதராபாத் மோதல்:
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பட்லர் மற்றும் ஜெய்ஷ்வால் ஆகியோர் ராஜஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய பட்லர், ஐதராபாத் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தார்.
முதல் 4 பந்துகளில் 3 ரன்களை எடுத்திருந்த பட்லர், புவனேஷ்வர் குமார் வீசிய போட்டியின் மூன்றாவது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு விளாசினார். அதைதொடர்ந்து, முழுவதும் அதிரடி ஆட்டத்தை மட்டுமே அவர் வெளிப்படுத்தினார். அதே ஓவரிலேயே மேலும் இரண்டு பவுண்டரிகளை அடித்தார். நான்காவது ஓவரை வீசிய வாஷிங்டன் சுந்தரின் முதல் இரண்டு பந்துகளையும் சிக்சராக மாற்றினார். நடராஜன் வீசிய ஐந்தாவது ஓவரில் அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை ஓடவிட்டார். இதன் மூலம், 17 பந்துகளில் 42 ரன்களை எட்டினார்.
20 பந்துகளில் அரைசதம்:
தொடர்ந்து, பவர்பிளேயின் கடைசி ஓவரை ஃபரூகி வீசினார். அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளில் 3 பவுண்டரிகளை அடித்து மிரட்டினார். இதன் மூலம் 20 பந்துகளிலேயே பட்லர் அரைசதம் கடந்து, நடப்பு தொடரில் அதிவேகமாக அரைசதம் விளாசிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடங்கும்.
54 ரன்களில் அவுட்:
54 ரன்களை சேர்த்து இருந்த போது பவர்பிளே ஓவரில் ஃபரூகி வீசிய இரண்டாவது கடைசி பந்தில், கிளீன் போல்டாகி பட்லர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஒருவேளை இந்த போட்டியில் மேலும் 39 ரன்களை சேர்த்து இருந்தால், டி-20 போட்டிகளில் 9500 ரன்களை பூர்த்தி செய்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் மற்றும் 10வது சர்வதேச வீரர் எனும் பெருமையையும் பட்லர் பெற்று இருப்பார். கடந்த தொடரிலும் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடிய பட்லர், 4 சதங்கள் உட்பட 863 ரன்களை சேர்த்து ஆரஞ்சு தொப்பியையும் தனதாக்கினார். பட்லர் கடைசியாக விளையாடிய 19 ஐபிஎல் இன்னிங்ஸில் 5 சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பவர்பிளேயில் அசத்தல்:
பட்லர் ஒருபுறம் அதிரடியாக ஆட, மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய ஜெய்ஷ்வால் 13 பந்துகளில் 30 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் பவர்பிளே முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 85 ரன்களை சேர்த்தது. நடப்பாண்டு ஐபில் தொடரில் பவர்பிளே முடிவில் அதிக ரன்களை அடித்த அணி என்ற பெருமையும் ராஜஸ்தான் அணியையே சேரும்.