மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 17வது ஐபிஎல் சீசனில் லீக் போட்டிகளில் களமிறங்கியுள்ள 10 அணிகளும் சிறப்பாகவே விளையாடி வருகின்றது. இதுவரை 18 லீக் போட்டிகள் முடிந்துள்ளது. இந்நிலையில் நாளை அதாவது ஏப்ரல் 7ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதவுள்ளது.


இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் முக்கியமான பந்துவீச்சாளர் ஒருவர் காயம் காரணமாக, மும்பை அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவலை கங்குலி தெரிவித்துள்ளார். 


ரிஷப் பண்ட் - ஹர்திக் பாண்டியா


இதுவரை முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் இடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் ராஜஸ்தான், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் உள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் கவனிக்கப்பட்டுள்ள அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் கட்டாயம் இடம் பெறும். இதற்கு காரணம் இரு அணிகளின் கேப்டன்கள்தான். மும்பை அணியைப் பொறுத்தவரையில், குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை ட்ரேட் செய்து, அவரது தலைமையில் நடப்பு சீசனை எதிர்கொண்டு வருகின்றது. 


அதேபோல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தினால், கடந்தாண்டு விளையாடவில்லை. இதனால் இந்த ஆண்டு மீண்டும் ரிஷப் பண்ட் தலைமையில் டெல்லி அணி விளையாடி வருகின்றது. இந்நிலையில் டெல்லி அணி நாளை மும்பை இந்தியன்ஸ் அணியை மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது. இந்நிலையில் டெல்லி அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தகவல் ஒன்றை டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இயக்குநராக உள்ள கங்குலி தெரிவித்துள்ளார். 






அவர், “ மிட்ஷெல் மார்ஷ்க்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார். அதேபோல் குல்தீப் யாதவ் இன்னும் காயத்தில் இருந்து மீளவில்லை. இதனால் குல்தீப் யாதவ் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார். மும்பை அணியைப் பொறுத்தவரை மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை அணி நிர்வாகம் நியமித்துள்ளது. அதனை நாம் மதிக்க வேண்டும் ”எனக் கூறினார். 


அணியில் முக்கியமான வீரர்கள் இருவர் காயம் காரணமாக மும்பை அணிக்கு எதிராக களமிறங்கமாட்டாரக்ள் என்ற செய்தி டெல்லி அணி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.