இதுவரை நடந்த ஐபிஎல் 2024ல் பல ஏற்றங்கள், பல பரபரப்பான சூழல்கள், அதிரடியான ஆட்டங்கள் என நாளுக்குநாள் எதிர்பார்ப்பு எகிறி கொண்டிருக்கிறது. இதுவரை ஐபிஎல்லில் பல வீரர்கள் சிறப்பாக விளையாடி மக்களின் மனதை வென்றுள்ளனர். பல இளம் வீரர்கள் எதிர்கால இந்திய அணியின் இடம்பிடிக்க கடுமையாக போராடி வருகின்றனர். இந்தநிலையில், விரைவில் இந்திய அணியில் இடம்பிடிக்கவுள்ள மூன்று இந்திய வீரர்களின் பெயரை இங்கே பார்க்கலாம்.
இந்த மூன்று வீரர்களில் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா, ரியான் பராக் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் ஆகியோர் முதல் மூன்று இடத்தில் உள்ளனர். எதிர்காலத்தில், இந்த மூன்று வீரர்கள் இந்திய அணியில் சேர்க்கப்படும் போது, அபிஷேக் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இருப்பார்கள். ரியான் பராக் நான்காவது இடத்தில் நங்கூரமாகவும், மயங்க் யாதவ் தனது வேகமான பந்துவீச்சால் எதிரணி வீரர்களை வீழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1- அபிஷேக் சர்மா
இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக தொடக்க வீரராக விளையாடி வரும் அபிஷேக் சர்மா அனைவரது மனதையும் வெகுவாக கவர்ந்துள்ளார். அபிஷேக் சர்மா இதுவரை 4 போட்டிகளில் 217.56 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டில் 161 ரன்கள் எடுத்துள்ளார். சென்னைக்கு எதிரான நேற்றைய கடைசிப் போட்டியில் அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 37 ரன்கள் குவித்து அசத்தினார்.
மேலும், ஐபிஎல் 2024 சீசனில் அதிவேக அரை சதம் அடித்தவர் அபிஷேக் சர்மாதான். கடந்த மார்ச் 27ம் தேதி ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 16 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
2- ரியான் பராக்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரியான் பராக், இந்த சீசனில் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஐபிஎல் 2024ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றிபெற்றது. அதற்கு முக்கிய காரணம் ரியான் பராக்தான். கடந்த சில ஆண்டுகளாக ரியான் பராக்கின் ஆட்டம் சொல்லிகொள்ளும்படியாக இல்லை.
இதனால், சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்தநிலையில், ஐபிஎல் 2024ல், ரியான் பராக் அதிரடியாக விளையாடி தன்னை விமர்சித்தவர்களுக்கு விமர்சகர்களுக்கு தகுந்த பதிலைக் கொடுத்து வருகிறார். இதுவரை, ஐபிஎல் 2024ல் 3 போட்டிகளில் விளையாடி 181 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான ஆரஞ்சு கேப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
3- மயங்க் யாதவ்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடும் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், தனது வேகமான பந்துவீச்சால் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறார். மயங்க் யாதவ் மணிக்கு 150 கிமீ வேகத்தில் தொடர்ந்து பந்துவீசி மிரட்டி வருகிறார்.
கடைசியாக மயங்க் யாதவ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக மணிக்கு 156.7 கிமீ வேகத்தில் பந்துவீசி, இந்த ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசிய பந்துவீசிய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். மேலும், இதுவரை வெறும் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடி 6 விக்கெட்களை வீழ்த்தி இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருதை வென்றார்.