ஐபிஎல்  தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


அதிரடியான பேட்டிங்:


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணி நிர்ணயித்த 140 ரன்கள் என்ற இலக்கை, நோக்கி களமிறங்கிய சென்னை அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் மற்றும் கன்வே அதிரடியாக ரன் குவித்தனர். தொடர்ந்து 30 ரன்கள் சேர்த்து இருந்தபோது கெய்க்வாட் ஆட்டமிழந்தார். இந்த கூட்டணி முதல் விக்கெட்டிற்கு 46 ரன்களை குவித்தது. இரண்டாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ரகானேவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 21 ரன்கள் சேர்த்து இருந்தபோது ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய ராயுடு 12 ரன்களில் நடையை கட்டினார். இருப்பினும் கான்வே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 44 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். அவருடன் சேர்ந்து சிவம் துபே அதிரடி காட்டினார்.


சென்னை அணி வெற்றி: 


இதனால் 17.4 ஓவர்கள் முடிவில் சென்னை அணி இலக்கை எட்டி விக்கெட்டுகள் 6 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 13 ஆண்டுகளுக்குப் பின் சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை  அணியை வீழ்த்தியதோடு, நடப்பு தொடரில் எதிர்கொண்ட 2 முறையும் சென்னை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.


முதல் இன்னிங்ஸ் விவரம்:


மும்பைக்கு பேரதிர்ச்சி:


சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  இதையடுத்து  மும்பை அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேமரூன் கிரீன் வெறும் 6 ரன்களிலும், இஷான் கிஷான் 7 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். இவர்களை தொடர்ந்து வந்த கேப்டன் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 


மும்பையை மீட்ட சூர்யா - வதேரா கூட்டணி:


தொடர்ந்து நான்காவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த வதேரா மற்றும் சூர்யகுமார் யாதவ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பை அணியை சரிவில் இருந்து மீட்டது. சீரான இடைவெளியில் பவுண்டரிகளையும் விளாசியது. தொடர்ந்து 26 ரன்கள் சேர்த்து இருந்தபோது ஜடேஜா பந்துவீச்சில் சூர்யகுமார் யாதவ் கிளீன் போல்டானார்.


சுழலில் நெருக்கடி:


சுழற்பந்துவீச்சை கொண்டு மும்பை அணிக்கு சென்னை அணி கடும் நெருக்கடி கொடுத்தது. இதனால், 15 ஓவர்கள் வரை மும்பை அணியால் ஒரு சிக்சரை கூட அடிக்கமுடியவில்லை. பவுண்டரிகளும் சொற்பமான எண்ணிக்கையில் மட்டுமே அடிக்கப்பட்டது.


வதேரா அரைசதம்:


மறுமுனையில் வதேரா மட்டும் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம், ஒரு சிக்சர் மற்றும் 5 பவுண்டரிகள்  உட்பட, 46 பந்துகளில் ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் அரைசதத்தை வதேரா பதிவு செய்தார். தொடர்ந்து 61 ரன்கள் சேர்த்து இருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 


சென்னை அணிக்கு இலக்கு:


இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே சேர்த்தது. சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக பதிரனா 3 விக்கெட்டுகளையும், சாஹர்  மற்றும் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து மும்பை அணி நிர்ணயித்த இலக்கை சென்னை அணி 1. ஓவர்களில் வெற்றி பெற்று அபார வெற்றி பெற்றது.