ஐ.பி.எல் சீசன் 17:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சால மைதானத்தில் 53 வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முக்கியமான ஒன்றாக உள்ளது. அதாவது புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்தில் இருக்கும் சென்னை ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் இன்றைய போட்டியின் வெற்றி மிக முக்கியம்.


ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் நேற்று வங்கதேசம் செல்வதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "எல்லாவற்றிற்கும் நன்றி மஹி பாய். உங்களைப் போன்ற ஜாம்பவான்களுடன் ஒரே டிரஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்து கொண்டது ஒரு சிறப்பு உணர்வாக இருந்தது. ஒவ்வொரு முறையும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. நீங்கள் தமக்கு பல யுக்திகளையும் நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். இனி கூடிய சீக்கிரம் உங்களுடன் மீண்டும் விளையாடுவேன் என்று நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.


இலங்கை திரும்பும் பத்திரனா:


இந்நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரான இலங்கை திரும்ப உள்ளதாக கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா தொடை தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இதானல் அவர் இலங்கை திரும்புகிறார்.


வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் ஐபிஎல் 2024 இல் ஆறு போட்டிகளில் விளையாடி 7.68 எகனாமியில்  13 விக்கெட்டுகளை எடுத்தார். பத்திரனா விரைவில் குணமடைய சென்னை சூப்பர் கிங்ஸ் வாழ்த்துகிறது."என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு முக்கிய வீரர்கள் அந்த அணியில் இருந்து விலகி இருப்பது சி.எஸ்.கே ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.