நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவிக்கும் வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிறத் தொப்பியை விராட் கோலி தன்வசம் வைத்துள்ளார். கிரிக்கெட் உலகின் ரன் மெஷின் எனப்படும் விராட் கோலி நடப்புத் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி, ஒரு சதம் 4 அரைசதம் உட்பட மொத்தம் 542 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இந்த 11 போட்டிகளிலும் 366 பந்துகளை எதிர்கொண்டு 48 பவுண்டரிகளும் 24 சிக்ஸர்களும் பறக்கவிட்டு 542 ரன்களை எட்டியுள்ளார். இவருடைய தற்போதைய ஸ்ட்ரைக் ரேட்148.08 ஆக உள்ளது. நடப்புத் தொடரில் விராட் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் 113 ரன்கள். இந்த சதத்தை விராட் கோலி ராஜஸ்தான் அணிக்கு எதிராக அடித்தார். 67 பந்துகளை எதிர்கொண்டு தனது சதத்தினை பூர்த்தி செய்த விராட் கோலி, 72 பந்துகளில் 113 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தார். 


மோசமான சாதனை படைத்த விராட்


விராட் கோலி சதம் விளாசி இருந்தாலும் ஐபிஎல் தொடரில் அதிக பந்துகளை எதிர்கொண்டு சதம் விளாசிய மணீஷ் பாண்டேவின் மோசமான சாதனையை விராட் கோலி சமன் செய்திருந்தார். இந்த ஆட்டத்தில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 156.94. இந்த சதம் எட்டப்படுவதற்கு முன்னதாக, விராட் கோலி 90 ரன்கள் வரை கொஞ்சம் அதிரடியாகவே விளையாடினார். 90 ரன்களை நெருங்கியதும் சதம் விளாசவேண்டும் என்ற எண்ணத்தில் அடித்து ஆடாமல் ஒவ்வொரு ரன்னாக எடுத்து தனது சதத்தினை எட்டினார். விராட் கோலி அவ்வாறு விளையாடாமல், அதிரடியாக ஆடியிருந்தால் ஒருவேளை அந்த போட்டியில் பெங்களூரு வெற்றியை எட்டியிருக்கலாம். இதனால் பெங்களூரு அணியின் தோல்விக்கு விராட் கோலிதான் முக்கியக் காரணம் என பேசப்பட்டது. 




கோபத்தை வெளிப்படுத்திய விராட்


இந்த விமர்சனங்களுக்கு விராட் கோலி பதில் அளித்திருந்தார். அதில், “ எனது ஸ்ட்ரைக் ரேட் குறித்து பேசுபவர்கள் நான் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவதில்லை என கூறுகின்றனர். என்னைப் பொறுத்தவரை அணிக்கு வெற்றி தேடித்தருவது முக்கியம். களத்தின் சூழலுக்கு ஏற்றவகையில் விளையாடுவதும் முக்கியம். எனவே ஒரு அறைக்குள் அமர்ந்து கொண்டு கமெண்டேட்டர்கள் தினமும் என்னவேண்டுமானாலும் பேசலாம்.  ஆனால் எப்போது என்ன செய்யவேண்டும் என்பது களத்தில் விளையாடும் எங்களுக்குத்தான் தெரியும்” என கூறினார்.


பதிலடி கொடுத்த கவாஸ்கர்


இந்நிலையில் விராட் கோலி ஸ்ட்ரைக் ரேட் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் குஜராத் போட்டிக்கு முன்னதாக பேசினார். அதில், “ எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. நான் பல போட்டிகளைப் பார்ப்பதில்லை. ஒரு தொடக்க வீரராக வரும் நீங்கள் 14 முதல் 15 ஓவர்கள் வரை விளையாடிவிட்டு தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறும்போது உங்களது ஸ்ட்ரைக் ரேட் 118ஆக இருந்தால், அதனை என்னவென்று கூறுவது. 




இதுகுறித்து குறிப்பிட்டு பேசினால் வெளியில் அமர்ந்துகொண்டு என்னவேண்டுமானாலும் பேசலாம். களத்திற்கு வந்து பாருங்கள் எனக் கூறுகின்றனர். நாங்களும் கொஞ்சம் கிரிக்கெட் விளையாடியுள்ளோம். ஆனால் நாங்கள் ஒரு கமெண்டேட்டர்களாக விருப்பு வெறுப்புகளைக் கடந்து வர்ணனை (ரன்னிங் கமெண்ட்ரி) செய்து வருகின்றோம். நாங்கள் என்ன பார்க்கின்றோமோ அதைத்தான் பேசுகின்றோம். மேலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனது சொந்த வர்ணனையாளர்களுக்கு எதிரான கருத்தினை ஊதிப் பெரியதாக்கியதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை” எனக் கூறினார்.


ரசிகர்கள் கருத்து


கவாஸ்கரின் இந்த பேச்சு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் புகைச்சலைக் கிளப்பியுள்ளது. சிலர் விராட் கோலிக்கு ஆதரவாகவும் சிலர் கவாஸ்கருக்கு ஆதரவாகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 


ரசிகர் ஒருவர், “நாங்கள் வர்ணனையாளர்கள் பாரபட்சமின்றி அவதானிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறோம். விராட்டின் வடிவத்தை கேள்வி கேட்பது விளையாட்டின் ஒரு பகுதியாகும்; அவரது ஆரஞ்சு தொப்பி தேடலைப் போல” எனக் கூறியுள்ளார். 


மற்றொருவர், “அனைத்து வர்ணனையாளர்களுக்கும் ஆதரவாக சுனில் கவாஸ்கர் நிற்கிறார், ஏனெனில் அவர்களின் கிரிக்கெட் அறிவைக் கேள்விக்குள்ளாக்கிய கோஹ்லியின் முரட்டுத்தனமான பதிலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளம்பரப்படுத்தியது. இதற்காக விராட் கோலி வெறுக்கப்படுவார். ஆனால் ரசிகராக நான் விராட் கோலிக்கு ஆதரவளிப்பேன்” என தெரிவித்துள்ளார். 


மற்றொரு ரசிகர், “சுனில் கவாஸ்கரின் பேச்சு, அவர் தனது விரக்தியை வெளிப்படுத்தியதாகத் தெரிகிறது. மேலும் அவர் தனது நிலைப்பாட்டில் சரியாக இருக்கலாம், ஆனால் அவரது தொனி விராட் மீது கடுமையான விரோதத்தை வெளிப்படுத்தியது” என கூறியுள்ளார்.