இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளருமானவர் முகமது சிராஜ். தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். சீசனில் பெங்களூர் அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக ஆடி வருகிறார்.
முகமது சிராஜ்:
இந்த நிலையில், முகமது சிராஜ் பி.சி.சி.ஐ. நிர்வாகத்தின் ஊழல் தடுப்பு புகார் பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தகவல்களை பகிர வேண்டும் ஒரு நபர் அவரை அணுகியதாக புகார் தெரிவித்துள்ளார். இதற்காக பெரிய அளவில் பணமும் தர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, உடனடியாக முகமது சிராஜ் பி.சி.சி.ஐ. ஊழல் தடுப்பு பிரிவிடம் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார்.
பின்னர், செல்போன் எண் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், முகமது சிராஜிற்கு வந்த அழைப்பு ஹைதரபாத்தில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. முகமது சிராஜை தொடர்பு கொண்டு ஆர்.சி.பி. தகவல்களை அளிக்குமாறு கேட்டவர் ஒரு ஓட்டுனர் என்பதும், அவர் சூதாட்ட தரகர் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. சூதாட்டத்திற்கு அடிமையான அவர் பெரிளவில் பணத்தை சூதாட்டத்தில் இழந்ததாக தெரியவந்துள்ளது. அவரை போலீசார் மடக்கிப்பிடித்து நடத்திய விசாரணையில் இந்த விவரங்கள் தெரியவந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சூதாட்டம்
ஐ.பி.எல். போன்று கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் கிரிக்கெட் தொடர்களின்போது கோடிக்கணக்கான பணங்களில் சூதாட்டம் சட்டவிரோதமாக நடைபெற்று வருகிறது. இதைத்தடுப்பதற்காக போலீசார் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே சூதாட்ட புகாரில் சிக்கி பல கிரிக்கெட் வீரர்கள் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். ஐ.பி.எல். தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக ஸ்ரீசாந்த், அங்கித் சவான் மற்றும் அஜித்சண்டிலா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல். தொடரில் சூதாட்ட புகார் காரணமாக விதிக்கப்பட்ட தடையால் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு தலா 2 ஆண்டுகள் ஐ.பி.எல். தொடரில் ஆட தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த 2 அணிகளும் ஆடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் ஆர்.சி.பி. அணிக்காக சிறப்பாக பந்துவீசி வரும் முகமது சிராஜ் 5 ஆட்டங்களில் ஆடி 8 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இந்த விவகாரம் தற்போது ஐ,பி.எல். வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: IPL MI: மும்பை இந்தியன்சின் மிரட்டும் பவுலிங் பட்டாளம்..! ஏலத்தில் எடுக்கப்பட்ட தொகை இவ்ளோதானா..?
மேலும் படிக்க: RR vs LSG IPL 2023: வலுவான ராஜஸ்தானை வீழ்த்துமா லக்னோ..? சாம்சன் - கே.எல்.ராகுல் படைகளில் பலம், பலவீனம் என்ன?