15வது ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 31வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளனர். இந்த தொடரில் இரு அணிகளும் பலம் மிகுந்த அணியாகவே வலம் வருகின்றன.


ஐ.பி.எல். தொடருக்கு அறிமுக அணியாக லக்னோ அணி இருந்தாலும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த போட்டியில் பெற்ற வெற்றி அந்த அணிக்கு உத்வேகத்தை அளிக்கும். கடந்த போட்டியில் சதமடித்த கே.எல்.ராகுல் லக்னோ அணியின் பேட்டிங்கிற்கு மிகுந்த பக்கபலமாக உள்ளார். குயின்டின் டி காக்கும் தொடக்க வீரராக அசத்த உள்ளார்.




மிடில் ஆர்டரில் மணீஷ் பாண்டே, தீபக்ஹூடா பேட்டிங்கில் அசத்தினால் மிகப்பெரிய ஸ்கோரை லக்னோ குவிக்கலாம். இளம் வீரர் ஆயுஷ் பதோனியும் பேட்டிங்கில் அசத்துவார் என்று நம்பப்படுகிறது. கடைசி கட்டத்தில் பேட்டிங்கில் அதிரடி காட்ட மார்கஸ் ஸ்டோய்னிஸ் உள்ளார். இவர்களுடன் ஆல்ரவுண்டராக ஜேசன் ஹோல்டரும், குருணல் பாண்ட்யாவும் உள்ளனர். பந்துவீச்சில் ஆவேஷ்கான், ரவிபிஷ்னோய் சிறப்பாக வீசினால் பெங்களூர் ரன் குவிக்க சிரமம் ஏற்படும்.


பெங்களூர் அணியைப் பொறுத்தவரை இந்த தொடர் தொடங்கியது முதல் சிறப்பாக ஆடி வருகிறது. பேட்டிங், பந்துவீச்சு, பவுலிங் என்று அனைத்து துறைகளிலும் பெங்களூர் அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. அந்த அணியின் கேப்டனும், அதிரடி வீரருமான பாப் டுப்ளிசிஸ் விளாசினால் பெங்களூர் ஸ்கோர் ஜெட் வேகத்தில் ஏறும். அவருக்கு இளம் வீரர் அனுஜ் ராவத் தொடக்கத்தில் அசத்துவார் என்று நம்பலாம். விராட் கோலியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.




கடந்த போட்டியில் அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் இந்த போட்டியிலும் வெளுத்து வாங்குவார் என்று நம்பலாம். பெங்களூர் அணியின் மிகப்பெரிய பலமாகவும். ஏபி டிவிலியர்சுக்கு சரியான மாற்று வீரராகவும் வலம் வருபவர் தினேஷ் கார்த்திக். இதுவரை ஆடிய 6 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே ஆட்டமிழந்துள்ளார். நெருக்கடியான நேரத்தில் களமிறங்கி கூலாக ஆடி மிகப்பெரிய ஸ்கோர்களை குவித்து வருகிறார். ஷபாஸ் அகமதும் பேட்டிங்கில் கலக்குவார் என்று நம்பலாம். புதிய அதிரடி வீரர் பிரபுதேசாயும் அதிரடி காட்டினால் பெங்களூர் 200 ரன்களை கூட கடக்க வாய்ப்புள்ளது.


பந்துவீச்சில் ஹர்ஷல் படேல் இன்றும் தொடர்ந்து கட்டுக்கோப்பாக வீசுவார் என்று நம்பலாம். இவர்களுடன் ஹேசில்வுட், முகமது சிராஜ் வேகத்தில் அசத்த உள்ளனர். சுழற்பந்துவீச்சில் ஹசரங்கா கலக்குவார் என்று நம்பலாம். அவருடன் மேக்ஸ்வெல்லும் பந்துவீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 6 போட்டிகளில் ஆடி 4  வெற்றி 2 தோல்வியுடன் 3வது இடத்திலும், பெங்களூர் 6 போட்டிகளில் ஆடி 4 வெற்றி 2 தோல்விகளுடன் 4வது இடத்திலும் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று அடுத்த இடத்திற்கு முன்னேற இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண