ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் எலிமினேட்டர் சுற்று போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி ராஜஸ்தான் அணியுடன் குவாலிஃபையர் 2 போட்டியில் விளையாடும். தோல்வி பெறும் அணி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிவிடும். ஆகவே இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு போட்டியின் தொடக்கம் முதலே நீடித்து வருகிறது.
இன்றைய எலிமினேட்டர் போட்டியில் வழக்கம்போல் 7 மணிக்கு டாஸ் போடாமல் மழை மற்றும் காற்று காரணமாக 7. 55 மணிக்கு டாஸ் போட்டப்பட்டு 8.10 மணிக்கு போட்டி தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பீல்டிங் தேர்வு செய்தார்.
அதன் அடிப்படையில் பெங்களுர் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டுபிளிசி மற்றும் விராட் கோலி களமிறங்கினர். லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஷின் கான் வீசிய 4 வது பந்தில் கோலி 3 ரன்கள் எடுக்க, அடுத்த பந்தே கேப்டன் டுபிளிசி ரன் எதுவும் எடுக்காமல் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
அடுத்து வந்த ரஜத் பட்டிதார் ஆரம்பம் முதலே அதிரடி காட்ட, விராட் கோலி மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து குர்னால் பாண்டியா வீசிய 6 வது ஓவரில் ஒரு சிக்ஸர், 3 பௌண்டரிகளை விரட்டினார். 6 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 52 ரன்களை கடந்தது.
ஆவேஷ் கான் வீசிய 9 வது ஓவரில் தூக்கி அடிக்க பார்த்த விராட் கோலி, மொஷின் கானிடம் கேட்ச் கொடுத்து 25 ரன்களில் வெளியேற, அடித்து ஆடிய பட்டிதார் 50 ரன்கள் அடித்து பெங்களூர் அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார்.
மறுமுனையில் களம் கண்ட மேக்ஸ்வல் 9 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த மஹிபால் லோமரோர் 19 ரன்களில் அவுட் ஆக, ரஜத் பட்டிதாருடன் இணைத்த தினேஷ் கார்த்தியும் அதிரடி காட்ட தொடங்கினார்.
இருவரும் லக்னோ அணியின் பந்து வீச்சுகளை நாலாபுறமும் சிதறவிட்டனர். ரவி பிஸ்னோய் வீசிய16 வது ஓவரில் மூன்று சிக்ஸர், 2 பௌண்டரி அடித்து 27 ரன்களை திரட்டினார் ரஜத் பட்டிதார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரஜத் பட்டிதார் 49 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார்.
20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் அடித்து லக்னோ அணிக்கு 208 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இறுதி வரை ரஜத் பட்டிதார் 112 ரன்களும், தினேஷ் கார்த்திக் 37 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்