ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற மும்பை அணி  183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 


விறுவிறுப்பான ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய மே 21 ஆம் தேதி வரை நடைபெற்ற லீக் போட்டிகள் முடிவில், குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்றது.இதில் நேற்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று போட்டியில் குஜராத் அணியை சென்னை அணி வீழ்த்தி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. 


தொடர்ந்து இன்று 2வது தகுதிச்சுற்று போட்டிக்கு செல்லும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. இதில் குர்ணல் பாண்ட்யா தலைமையிலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் பேட்டிங்கை தேர்வு செய்தார். 


முதலில் மிரட்டல்.. பின்னர் பணிவு... 


அதன்படி மும்பை அணி வீரர்கள் இஷான் கிஷன், ரோகித் சர்மா அணியின் இன்னிங்ஸை தொடங்கினர். அதிக ரன்களை இலக்காக நிர்ணயிக்க வேண்டுமென்ற முனைப்பில் தொடக்கம் முதலே இவர்கள் அடித்து ஆட நினைத்தனர். ஆனால் இந்த எண்ணத்தை பின்னால் வந்த வீரர்கள் சரியாக செய்தனர். ரோகித் சர்மா 11 ரன்களிலும், இஷான் கிஷன் 15 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 


தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் - கேமரூன் க்ரீன் ஜோடி லக்னோ அணியை பிரித்து மேய்ந்தது. யார் பந்து வீசினாலும் பவுண்டரி, சிக்ஸர் என நாலாபுறமும் பந்துகள் பறந்தது. இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 10 ஓவர்களில் 98 ரன்களை குவித்தது இந்த ஜோடி. அணியின் ஸ்கோர் 104 ஆக உயர்ந்த போது சூர்யகுமாரும், 105 ஆக உயர்ந்த போது கேமரூன் க்ரீனும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 


இதனால் மும்பை அணியின் ரன்வேகம் சரிவை நோக்கி போகத் தொடங்கியது. பின்னால் வந்த வீரர்களில் திலக் வர்மா 26 ரன்கள்,நெஹல் வதேரா 23 ரன்கள் எடுக்க , மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை குவித்தது. லக்னோ அணி தரப்பில் நவீன் உல் -ஹக் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். யாஷ் தாக்கூர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி லக்னோ அணி களமிறங்கியுள்ளது. 


இந்த போட்டியில் ஜெயித்தால் மட்டுமே இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை கொடுக்கும் 2வது தகுதிச்சுற்று போட்டிக்கு செல்ல முடியும் என்பதால் மும்பை, லக்னோ அணிகள் வெற்றி பெற போராடி வருகிறது என்பதால் இப்போட்டி விறுவிறுப்பாக செல்கிறது.