டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய கிருஷ்ணப்பா கவுதம்  சிக்சர் அடித்து அசத்தினார்.


கிருஷ்ணப்ப கவுதம் அசத்தல்:


நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முதன்முறையாக இம்பேக்ட் பிளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடரில் ஏற்கனவே நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் இம்பேக்ட் பிளேயர்கள் பயன்படுத்தப்பட்டாலும், அது போட்டியிலும், ரசிகர்களிடையேயும் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், லக்னோ மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில், கடைசி பந்தில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய கிருஷ்ணப்ப கவுதம் எதிரணியை மட்டுமின்றி, ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தினார்.


கடைசி பந்தில் இறங்கிய இவர் என்ன செய்து விடுவார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், சகாரிய வீசிய போட்டியின் கடைசி பந்தை சிக்சராக மாற்றி கவனம் பெற்றார். இதையடுத்து, பந்துவீச்சிலும் அவர் அசத்துவாரா? என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும். முன்னதாக  கலீல் அகமதிற்கு மற்றான இம்பேக்ட் பிளேயராக ஆல்ரவுண்டரான அமன் கானை டெல்லி அணியும் கடைசி ஓவரின் போது களமிறக்கியது. 


இம்பேக்ட் பிளேயர் விதி


ஒவ்வொரு அணியும் ஆடும் லெவன் அணியை அறிவிக்கும்போதே, நான்கு சப்ஸ்டிட்யூட்களை அறிவிக்க வேண்டும், அவர்களில் இருந்து ஒரே ஒருவரை ஒருமுறை மட்டும் வேறு ஒரு வீரருக்கு பதிலாக மாற்றிக்கொள்ளலாம். அவ்வாறு இறங்கும் வீரர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்திலும் ஈடுபடலாம். 


லக்னோ - டெல்லி மோதல்:


நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் லக்னோ மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 


கைல் மேயர்ஸ் அதிரடி:


இதையடுத்து, கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் லக்னோ அணிக்கான தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே நிதானமாக விளையாடிய கே. எல். ராகுல் வெறும் 8 ரன்களை மட்டுமே சேர்த்து அவுட்டானார்.  மறுமுனையில் நிதானமாக விளையாடிய கைல் மேயர்ஸ், பவர்பிளே முடிந்ததும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டெல்லியின் பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் பறக்கவிட்டார்.  38 பந்துகளை எதிர்கொண்ட மேயர்ஸ் 7 சிக்சர்கள் மற்றும்  2 பவுண்டரிகள் உட்பட 73 ரன்களை சேர்த்தார்.  அவரை தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரான் 21 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் உட்பட 36 ரன்களை சேர்த்து கலீல் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்கள் இழப்பிற்கு 193 ரன்களை சேர்த்தது.