ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.


16வது ஐபிஎல் சீசன்: 


நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் டெல்லி மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 


டெல்லி அணி நிலவரம்:


காயம் காரணமாக ரிஷப் பண்ட் நடப்பு தொடரிலிருந்து விலகிய நிலையில், டேவிட் வார்னர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கான கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.  மணீஷ் பாண்டே, மிட்செல் மார்ஷ், சர்ஃபராஸ் கான், பிருத்வி ஷா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் அந்த அணிக்கு பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளனர். பந்துவீச்சை பொறுத்தவரையில், அன்ரிச் நார்ட்ஜே,முஸ்தாபிசுர் ரஹ்மான், லுங்கி நிகிடி, கலீல் அகமது மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் எதிரணிக்கு கலக்கம் ஏற்படுத்த தயாராக உள்ளனர். இதுவரை கோப்பையை கைப்பற்றாத டெல்லி அணி, ஏற்கனவே ஐதராபாத் அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்ற வார்னர் தலைமையில் நடப்பாண்டில் களமிறங்கியுள்ளது. இதனால், இந்த தொடரில் ஆவது டெல்லி அணி கோப்பையை கைப்பற்றுமா என்ற ஆர்வம் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.


லக்னோ அணி நிலவரம்:


கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. kஏ. எல். ராகுல் தலைமையிலான இந்த அணி விளையாடிய 14 போட்டிகளில் 9 ல் வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது. ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் தோல்வியை தழுவியது. கேஎல் ராகுல், குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோய்னிஸ்,நிக்கோலஸ் பூரன் ஆகியோர் லக்னோ அணியின் பேட்டிங் தூண்களாக உள்ளனர். அதோடு, ரவி பிஷ்னோய்,கிருஷ்ணப்பா கவுதம், அவேஷ் கான், டேனியல் சாம்ஸ் மற்றும் ஜெய்தேவ் உனத்கட் என பந்துவீச்சிலும் சமபலத்துடன் உள்ளது. இதனால், நடப்பு தொடரை வெற்றியுடன் தொடங்க லக்னோ அணி தயாராகியுள்ளது.


நேருக்கு நேர்:


ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரண்டு அணிகளும் இருமுறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இரண்டிலுமே லக்னோ அணி தான் வெற்றி பெற்றுள்ளது. இந்த தோல்விகளுக்கு பழிவாங்கும் நோக்கில் டெல்லி அணி களமிறங்கியுள்ளது. பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் நடந்த, 3 டி20 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியே 2 முறை வெற்றி பெற்றுள்ளது.