ஐபிஎல் போட்டியின் 16வது சீசனின் மூன்றாவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதிக் கொண்டன. 50 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட, லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்தது.
அதன் படி லக்னோ அணியின் இன்னிங்ஸை தொடங்கிய கே.எல். ராகுல் மற்றும் மேயர்ஸ் ஜோடி துவக்கத்தில் ரன்கள் சேர்க்க சிரமப்பட்டனர். கே.எல். ராகுல் அவுட் ஆன பிறகு மேயர்ஸ் அடித்து ஆடினார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ இறுதியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் குவித்தது.
அதன் பின்னர் 194 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு பவர்ப்ளேவில் அதிர்ச்சி காத்து இருந்தது. போட்டியின் 5வது ஓவரின் மூன்றாவது மற்றும் நான்காவது பந்தில் லக்னோ அணியின் மார்க் வுட் விக்கெட்டுகள் எடுத்து டெல்லி அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்த சீசனின் முதல் கோல்டன் டக் எடுத்தவர் என்ற மோசமான புகழுக்கு டெல்லி அணியின் மிட்ஷெல் மார்ஸ் ஆளாகியுள்ளார்.
7 ஒவர்களில் 101 ரன்கள்
அதன் பின்னர் 7வது ஓவரை வீசிய மார்க் வுட் பந்தில் டெல்லி அணியின் சர்ஃப்ரஸ் கான் ஆட்டமிழக்க, நெருக்கடியைச் சந்தித்தது. இப்படி விக்கெட்டுகள் விழுந்தபடி இருந்தாலும் டெல்லி அணியின் கேப்டன் வார்னர் மிகவும் நிதானமாக ரன்களை சேர்த்து வந்தார். கடைசி 7 ஓவர்களில் டெல்லி அணியின் வெற்றிக்கு 101 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி நம்பிக்கை
அதன் பின்னரும் லக்னோ அணி மேலும் ஒரு விக்கெட் எடுக்க, டெல்லி அணிக்கு நெருக்கடி மேலும் அதிகரித்தது. இந்நிலையில், டெல்லி அணிக்கு இருந்த ஒரே நம்பிக்கை டேவிட் வார்னர் மட்டும் தான். நிதானமாக ஆடிவந்த வார்னர் 45வது பந்தில் தான் தனது அரைசத்தினை எடுத்தார். அதன் பின்னார் வார்னருடன் கைகோர்த்த இம்பேக்ட் ப்ளேயரும் ஏமாற்ற, அக்ஷர் பட்டேல் களத்துக்கு வந்தார். ஆனால் ஒரே நம்பிக்கையாக இருந்த வார்னர் அவுட் ஆக போட்டியில் தொடர்ந்து லக்னோவின் ஆதிக்கம் நீடித்தது.
லக்னோ வெற்றி
இறுதியில் டெல்லி அணி 20ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் லக்னோ 50அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மீலம் டெல்லி அணியை தொடர்ந்து மூன்று போட்டிகளில் லக்னோ அணி வீழ்த்தியுள்ளது. லக்னோ சார்பில் மார்க் வுட் 5 விக்கெட்டுகளும் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.