ஐ.பி.எல் .தொடரில் டெல்லி அணிக்கு எதிரான் போட்டியில் லக்னோ அணி 194 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. கைல் மேயர்ஸ் அபாரமாக விளையாடி அரைசதமடித்து அசத்தினார்.
16வது ஐபிஎல் சீசன்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் லக்னோ மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் லக்னோ அணிக்கான தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
கே. எல் ராகுல் சொதப்பல்:
ஆரம்பம் முதலே நிதானமாக விளையாடிய கே. எல். ராகுல் 12 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்சர் உட்ப்ட வெறும் 8 ரன்களை மட்டுமே சேர்த்து, சகாரிய பந்துவீச்சில் கேட்ச் முறையில் அவுட்டானார். இதனால் லக்னோ அணி பவர்பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 30 ரன்களை மட்டுமே எடுத்தது.
ருத்ரதாண்டவம் ஆடிய மேயர்ஸ்:
மறுமுனையில் நிதானமாக விளையாடிய கைல் மேயர்ஸ், பவர்பிளே முடிந்ததும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 28 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து டெல்லி பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் பறக்கவிட்டார். இறுதியில் அக்சர் படேல் பந்துவீச்சில் போல்ட் முறையில் அவுட்டானார். 38 பந்துகளை எதிர்கொண்ட மேயர்ஸ் 7 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் உட்பட 73 ரன்களை சேர்த்தார்.
வேகம் காட்டிய பூரான்:
அவரை தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரான், வந்த வேகத்திலேயே அடிக்க தொடங்கினார். 21 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் உட்பட 36 ரன்களை சேர்த்து கலீல் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் நிக்கோலஸ் பூரான் 16 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் சரிந்த விக்கெட்கள்:
பொறுப்புடன் விளையாடிய தீபக் ஹூடா 17 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டோய்னிஸ் 12 ரன்களில் நடையை கட்டினார். இறுதியில், படோனி அதிரடி காட்டினார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 193 ரன்களை எடுத்தது. டெல்லி அணி சார்பில் கலீல் அகமது மற்றும் சகாரியா அதிகபட்சமாக தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
பீல்டிங்கில் கோட்டை விட்ட டெல்லி:
மேயர்ஸ் 14 ரன்கள் எடுத்திருந்தபோது சகாரியா பந்துவீச்சில் கொடுத்த எளிமையான கேட்ச்சை, கலீல் அகமது கோட்டை விட்டது டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவாக மாறியது. அதோடு, பல இடங்களில் பீல்டிங்கில் சொதப்பியதும் டெல்லி அணிக்கு இந்த பெரிய இலக்கு கிடைக்க முக்கிய காரணமாகும்.