ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் பிராவோவின் சாதனையை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் உமேஷ் யாதவ் தகர்த்துள்ளார்.


உமேஷ் யாதவ் புதிய சாதனை:


ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் பல்வேறு புதுப்புது சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 11வது ஓவரின் கடைசி போட்டியில் ராஜபக்ச விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், கொல்கத்தா அணி பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் புதிய சாதனை படைத்துள்ளார். அதன்படி, ஐபிஎல் வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும், பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக, சென்னை அணியின் முன்னாள் வீரர் பிராவோ மும்பை அணிக்கு எதிராக 33 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. இந்நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிராக 34 விக்கெட்டுகளை வீழ்த்தி, பிராவோவின் சாதனையை உமேஷ் யாதவ் தகர்த்துள்ளார். 


ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த வீரர்கள்:


உமேஷ் யாதவ் -  பஞ்சாப் அணிக்கு எதிராக 34 விக்கெட்கள்


பிராவோ - மும்பை அணிக்கு எதிராக 33 விக்கெட்கள்’


சுனில் நரைன் -  பஞ்சாப் அணிக்கு எதிராக 32 விக்கெட்கள்


மலிங்கா - சென்னை அணிக்கு எதிராக 31 விக்கெட்கள்


அமித் மிஸ்ரா - ராஜஸ்தான் அணிக்கு எதிராக 30 விக்கெட்கள்


ஐபிஎல் தொடரில் உமேஷ் யாதவ்:


வலது கை வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் கடந்த 2010ம் ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடி, ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். அதைதொடர்ந்து நான்கு ஆண்டுகள் டெல்லி அணிக்காக விளையாடினார். பின்பு, 2014ம் ஆண்டு தொடங்கி 4 சீசன்கள் கொல்கத்தா அணிக்காக விளையாடியுள்ளார் உமேஷ் யாதவ்.  பின்பு 2018ம் ஆண்டு தொடங்கி 3 சீசன்கள் பெங்களூரு அணிக்காகவும், 2021ம் ஆண்டு டெல்லி அணிக்காகவும் களமிறங்கினார். இறுதியாக கடந்த 2022ம் ஆண்டு முதல் கொல்கத்தா அணிக்காக, 2 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் உமேஷ் யாதவ் விளையாடி வருகிறார்.


சாதனைகள்:


இதுவரை 134 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 136 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு போட்டியில் 23 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தது அவரது சிறந்த பந்துவீச்சாக உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளார் உமேஷ் யாதவ்.  கடந்த 2018ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் உமேஷ் யாதவ் 100 விக்கெட்டுகளை எட்டினார்.  கடந்த தொடரில் கொல்கத்தா அணிக்காக 12 போட்டிகளில் விளையாடிய உமேஷ் யாதவ், 16 விக்கெட்களை வீழ்த்தினார். அதோடு, 143 டாட் பால்களையும் வீசினார்.