ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கெத்து காமித்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு டெல்லி அணி 130 ரன்கள் மட்டுமே குவித்தது.  டெல்லி அணியில் அதிகபட்சமாக அமான் ஹகிம் கான் 51 ரன்கள் அடித்திருந்தார். 


131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. ஹர்திக் பாண்டியா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் எடுத்தும் பலனில்லை.  டெல்லி அணியில் அனுபவம் வாய்ந்த இஷாந்த் சர்மா 4 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றியில் மிக முக்கிய பங்கு வகித்தார்.


குஜராத் அணி 19-வது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரில் அவருக்கு 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில், டெல்லியின் பந்துவீச்சு கட்டளை இஷாந்த் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது, அவர் தனது முதல் பந்தில் 2 ரன்கள் கொடுத்தார், அதன் பிறகு இரண்டாவது பந்தில் 1 ரன் மட்டுமே கொடுத்தார். ராகுல் தெவாடியா ஸ்டிரைக்கில் வந்த பிறகு, இஷாந்த் மூன்றாவது பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே தூக்கி வீசி டாட் செய்தார். இதன்பிறகு, அந்த ஓவரின் நான்காவது பந்தில், இஷாந்த், ராகுல் தெவாடியாவின் விக்கெட்டை எடுத்து டெல்லி அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்தார்.


இஷாந்த் சர்மா தனது ஓவரின் கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து டெல்லி அணிக்கு இந்த ஆட்டத்தில் திரில் வெற்றியை பெற்று தந்ததில் முக்கிய பங்கு வகித்தார். ஐபிஎல்லில் இஷாந்த் ஷர்மாவுக்கு முன்பு, டேனியல் சைம்ஸ் கடைசி ஓவரில் 9 ரன்களை கட்டுப்படுத்தினார்.  அதன் பிறகு இப்போது குஜராத்துக்கு எதிராக கடைசி ஓவரில் 12 ரன்களை கட்டுப்படுத்திய இரண்டாவது பந்துவீச்சாளராக இஷாந்த் ஆனார்.






வெற்றிக்கு பிறகு பேசிய இஷாந்த் சர்மா, “நெட்ஸில் கூட புதிய பந்தில் பந்து வீசும்போது, ​​வைட் யார்க்கரைப் பயிற்சி செய்கிறேன். அந்த கடின உழைப்புக்கு இன்று பலன் கிடைத்துள்ளது என நினைக்கிறேன். நான் என்னை நம்பி வைட் யார்க்கர்களை வீசினேன். வெவ்வேறு பேட்ஸ்மேன்களுக்கு எந்தெந்த பந்துகளை வீசுவது என்று பயிற்சி செய்து, அதில் அதிக நேரம் செலவிடுகிறோம்.


உங்களை நம்புவது தான் விஷயம். எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பந்தையும் சரியான இடத்தில் வீச வேண்டும் என்பது தான். அதனால்தான், இதுபோன்ற வைட் யார்க்கர் பந்துகளை வீசுவேன் என்று என்னை நம்பினேன், ரன்களையும் கட்டுப்படுத்தினேன்” என்றார். 


கெத்தாக கம்பேக் கொடுத்த இஷாந்த் சர்மா: 


ஐபிஎல் தொடரில் நீண்ட நாட்களுக்கு பிறகு இஷாந்த் சர்மாவுக்கு இந்த சீசனில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. 34வயதான வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா பல ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியின் வீரராகவே இருந்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இடம்பெறவில்லை. 


ஐபிஎல் தொடரிலுமே கடைசியாக 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் முழு சீசனிலும் விளையாடினார். அதன்பிறகு நடந்த எந்தவொரு சீசனிலும் ஒரு முறை மட்டுமே ஆறு போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த சீசனில் இவரது பந்துவீச்சு அனைவரையும் கவர்ந்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றதையடுத்து இஷாந்துக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது. அந்த போட்டியில் 3 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.


நேற்று குஜராத் அணிக்கு எதிராக 4 ஓவர்கள் வீசிய இஷாந்த் சர்மா 23 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார்.