தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியின் ஆட்டம் இந்திய ரசிகர்கள் பலருக்கும் வேதனையை ஏற்படுத்தியது. கேப்டனாக கே.எல்.ராகுல் தனது கேரியரை தொடங்கிய முதல் தொடரில் இந்திய அணி ஒய்ட் வாஷ் செய்யப்பட்டு திரும்பியது.
இந்திய அணியின் தோல்விக்கு கே.எல்.ராகுலின் கேப்டன்சியே காரணம் என்றும், கே.எல்.ராகுலுக்கு கேப்டன்சி செய்ய தெரியவில்லை என்றும் இந்திய ரசிகர்கள் முதல் பல நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையில், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் புதியதாக களமிறங்கியுள்ள லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் கே.எல்.ராகுல் ஒப்பந்தம் செய்யபட்டார். அதோடு, லக்னோ அணிக்கு கே.எல்.ராகுல்தான் தலைமை தாங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், 2022 இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்திற்கு முன்னதாக, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தங்கள் லோகோவை வெளியிட்டுள்ளது. விரைவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் ஏலத்தில் உற்சாகத்தை தட்டியெழுப்பும் வகையில் லக்னோ அணி தங்களது லோகோவை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பிடத்தக்க வகையில், லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு புதிய உரிமையாளர்கள் ஐபிஎல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐபிஎல் 10 அணிகள் பங்கேற்கும் போட்டியாக இந்த சீசனில் இருந்து தொடங்குகிறது. பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் ஒரு மெகா ஏலம் நடைபெற உள்ளது. அந்த ஏலத்தில் அனைத்து அணிகளும் புதிதாக தங்கள் அணிகளை உருவாக்க இருக்கின்றனர்.
புதிய லோகோ :
கருட பறவையின் சிறகுகள் பதிக்கப்பட்ட அந்த லோகோவில் தேசிய கொடியில் உள்ள மூன்று வண்ண நிறங்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும், பறவையின் உடலில் கிரிக்கெட் விளையாட்டைக் குறிக்கும் வகையில் நீல நிற கிரிக்கெட் பேட் உடலும், சிவப்பு நிற பந்தும் உள்ளது. இதுகுறித்து லக்னோ அணி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மகத்துவத்தை நோக்கி உயர, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தனது சிறகுகளை விரிக்க தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த இரண்டு சீசன்களிலும் பஞ்சாப் அணியில் கேப்டனாக செயல்பட்ட கே.எல்.ராகுலின் கேப்டன்சி பெரிதாக பேசப்படவில்லை. பஞ்சாப் அணி அந்த இரண்டு சீசன்களிலும் கடைசி இடங்களை மட்டுமே பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஐபிஎல் 2022 தொடரிலாவது கே.எல்.ராகுல் தலைமை தாங்கும் லக்னோ அணியின் செயல்பாடு சிறப்பாக இருக்குமா என்று பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்