பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து அடுத்த ஆண்டு விலகும் முடிவை எடுத்ததற்கான காரணத்தை விராட் கோலி விளக்கி இருக்கிறார்.


துபாயில் ஐ.பி.எல். 2021 ஆம் ஆண்டுக்கான 2 ஆம் பகுதி தொடங்கிய சில நாட்களில் அடுத்த ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். ஏற்கனவே இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்ததன் பின்னணியில் பிசிசிஐ அழுத்தம் மற்றும் உள் அணி பிரச்சனைகள் இருக்குமோ என்ற பேச்சுக்கள் அடிப்பட்டன.


அதை தொடர்ந்து ஐ.பி.எலில் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி வீரராக விளையாட விரும்புகிறேன் என கோலி அறிவித்ததன் பின்னணி என்னவாக இருக்கும் என்ற யூகங்களை பலர் பலவாறு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் வதந்திகளுக்கும் யூகங்களுக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் பேசி இருக்கிறார் விராட் கோலி.


துபாயில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இன்சைட்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது, “நான் 2 காரணங்களுக்காக கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். அதில் முக்கியமான காரணம் எனக்கு இருக்கும் பணிச் சுமை. இரண்டாவது என் மீது உள்ள பொறுப்புகள் மற்றும் கடமைகள் மீது நான் நேர்மை அற்றவனாக இருக்க விரும்பவில்லை. என் மீதான பொறுப்புகளை 120 சதவீதம் சரியாக செய்ய வேண்டும் என நான் விரும்புவேன். அவ்வாறு செய்யாவிட்டால் அதிலிருந்து விலக முடிவு செய்துவிடுவேன். நான் எனக்கு வழங்கப்பட்டு உள்ள பொறுப்புகளை பெயருக்காக சுமந்து கொண்டிருக்கும் நபர் இல்லை. நான் எதன் மீதும் அதிக நாட்டம் இல்லாத ஒருவன்.” எனத் தெரிவித்து இருக்கிறார்.



19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கேப்டனாக செயல்பட்டு இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுத்த விராட் கோலி, 2008 ஆம் ஆண்டு முதன் முதலில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டதில் இருந்தே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். ராகுல் டிராவிட், அனில் கும்பிளேவுக்கு பிறகு 2013 ஆம் ஆண்டில் இருந்து பெங்களூரு அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார் விராட் கோலி. இதுவரை 3 முறை அவரது தலைமையின் கீழ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக ஆட்டத்தை ஆடி இறுதிப் போட்டிக்குள் பெங்களூரு அணியை கொண்டு சென்றார் விராட் கோலி. ஆனால், கோப்பையை அவரால் முத்தமிட இயலவில்லை.


தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு பெங்களூரு அணி முன்னேறி இருக்கிறது. இன்றைய எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தினால் அந்த அணி 2 வது எலிமினேட்டர் போட்டியில் டெல்லியை அணியை மோதும். அதிலும் வெற்றிபெற்றால் பெங்களூரு அணியால் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள முடியும். ஈ சாலா கப் நமதே என்ற பெங்களூரு ரசிகர்களின் கோப்பை கனவு இம்முறையாவது நனவாகிறதா என்று பார்ப்போம்.