ஷார்ஜா மைதானத்தில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற விராட்கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
விராட்கோலியும், தேவ்தத் படிக்கல்லும் நிதானமாகவும், அதேசமயம் துரிதமாகவும் ரன்களை சேர்த்தனர். பெர்குசன் பந்தில் 21 ரன்கள் எடுத்திருந்த தேவ்தத் படிக்கல் போல்டாகி வெளியேறினார். கடந்த போட்டியின் கதாநாயகன் கே.எஸ்.பரத் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். 6வது ஓவரில் 50 ரன்களை கடந்த பெங்களூர் வேகத்திற்கு சுழற்பந்துவீச்சாளர்கள் முட்டுக்கட்டை போட்டனர். சுனில் நரைன் பந்தில் கேப்டன் விராட் கோலி 39 ரன்களில் போல்டாகினார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் 14வது ஓவரில்தான் பெங்களூர் 100 ரன்களை கடந்தது. ஆனால், சுனில் நரைன் மாயாஜால பந்து வீச்சில் டிவிலியர்ஸ் போல்டாக்கினார். 5 போட்டிகளில் 4 அரைசதம் அடித்த கிளன் மேக்ஸ்வெலும் சுனில் நரைன் பந்தில் கேட்ச்சாகி 15 ரன்னில் ஆட்டமிழந்தார். பெங்களூர் அணி கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தனர். சுனில் நரைன் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பெங்களூர் அணி இந்த போட்டியில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை.
139 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தாவிற்கு சுப்மன்கில்லும், வெங்கடேஷிம் அதிரடி தொடக்கத்தை அளித்தனர். 41 ரன்களாக இருந்தபோது சுப்மன் கில்லை இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய ஹர்ஷல் படேல் வெளியேற்றினார். அவர் அவுட்டான சிறிது நேரத்தில் ராகுல் திரிபாதி 6 ரன்னில் சாஹல் பந்தில் வெளியேறினார். தொடக்க வீரர் வெங்கடேஷை 26 ரன்னில் ஹர்ஷல் படேல் அவுட்டாக்கினார். இந்த விக்கெட் மூலம் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய ப்ராவோவின் சாதனையை ஹர்ஷல் படேல் சமன் செய்தார்.
4வது விக்கெட்டிற்காக களமிறங்கிய சுனில் நரைன் டேன் கிறிஸ்டியன் வீசிய ஓவரில் 3 பந்தில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு ஆட்டத்தை கொல்கத்தா பக்கம் திருப்பினார். அப்போது, சாஹல் பந்தில் நிதிஷ் ராணா 24 ரன்களில் வெளியேறினார். கொல்கத்தாவின் வெற்றிக்கு 30 பந்தில் 27 ரன்கள் தேவைப்பட்டது.
ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் சுனில் நரைன் அளித்த முக்கியமான கேட்ச்சை தேவ்தத் படிக்கல் கோட்டைவிட்டார். ஆனால், முகமது சிராஜ் வீசிய 17வது ஓவரில் சுனில் நரைன் 26 ரன்னில் போல்டாகினார். அவர் அவுட்டான சிறிது நேரத்தில் தினேஷ் கார்த்திக்கும் முகமது சிராஜ் பந்தில் விக்கெட் கீப்பர் பரத்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒரே ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி ஒரு ஓவரில் 7 ரன்கள் கொல்கத்தா வெற்றிக்கு தேவைப்பட்டது.
ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், காட்டன் ஆகியோருக்கு ஓவர்கள் இல்லாததால் டேன் கிறிஸ்டியனே கடைசி ஓவரை வீசினார். கிறிஸ்டியன் வீசிய முதல் பந்திலே ஷகிப் அல் ஹசன் பவுண்டரி அடித்தார். கடைசியில் கொல்கத்தா அணி 2 பந்துகள் மீதம் வைத்து கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிறிஸ்டியன் 1.4 ஓவர்கள் மட்டுமே வீசி 29 ரன்களை விட்டுக்கொடுத்து பெங்களூர் தோல்விக்கு முக்கிய காரணமானார்.
பெங்களூர் அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக கேப்டனாக பொறுப்பு வகித்து வந்த விராட்கோலி தோல்வியுடன் இந்த போட்டியில் இருந்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். கொல்கத்தா அணி வரும் புதனன்று டெல்லியுடன் குவாலிபயர் 2ம் ஆட்டத்தில் ஆட உள்ளது.