ஐ.பி.எல். தொடரின் முக்கிய ஆட்டத்தில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நேருக்கு நேர் மோதின. புனேவில் நடைபெறும் இந்த போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? போட்டி ஆகும்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. டாப் ஆர்டர் பேட்டர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஸல் 49 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்கள் குவித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஹைதரபாத் அணி பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார், மார்க்கோ ஜென்சன், நடராஜன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு, ஓப்பனர் அபிஷேக் ஷர்மா சிறப்பான ஓப்பனிங் தந்தார். ஆனால், பந்துகளை வீண் செய்து கொண்டிருந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை அடுத்து வந்த பேட்டர்களும் சொதப்பினர். மார்க்கரம் மட்டும் நிதானமாகி பேட் செய்து 32 ரன்கள் சேர்த்தார்.
முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் அதிரடி காட்டிய ரஸல், இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சில் அசத்தினார். 3 விக்கெட்டுகள் எடுத்த அவர், 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்தார். டிம் சவுதி 2 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், சுனில் நரைன், வருண் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது ஹைதராபாத் அணி.
54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, கொல்கத்தா அணியின் ப்ளே ஆஃப் கனவு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. போட்டி முடிவில், 12 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது கேகேஆர். தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வரும் ஹைதராபாத் அணி, எட்டாவது இடத்திற்கு பின் நோக்கி சென்றிருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்