KKR Vs SRH, IPL Playoff 2024: கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ள முதல் குவாலிஃபையர் போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஐபிஎல் பிளே-ஆஃப் சுற்று:
கடந்த மார்ச் மாதம் இறுதியில் 10 அணிகளுடன் தொடங்கிய ஐபிஎல் தொடர், சர்வதே கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. 70 லீக் போட்டிகளின் முடிவில் 6 அணிகள் தொடரில் இருந்து வெளியேற, கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. அதன்படி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது என்பதை இறுதி செய்யும், முதல் குவாலிஃபையர் போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோத உள்ளன.
கொல்கத்தா Vs ஐதராபாத் மோதல்:
முதல் குவாலிஃபையர் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள, நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. கொல்கத்தா அணி 9 வெற்றிகளுடன் லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்தி, முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மறுமுனையில் ஐதராபாத் அணியோ, முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அசுரத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது. கடினமான இலக்குகளையும் அநாயசமாக சேஸ் செய்து, 8 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் தனது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், இரண்டு அணிகளும் இன்றைய போட்டியில் வென்று, நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற மிகுந்த தீவிரம் காட்டுகின்றன. இந்த போட்டியில் தோல்வியுறும் அணி, எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோத வேண்டியிருக்கும் என்பதால், இன்றே வெற்றி பெற இரு அணிகளும் மல்லுக்கட்டுகின்றன. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
பலம், பலவீனங்கள்:
கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் சுனில் நரைன், ரஹ்மனுல்லா குர்பாஸ், ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் அய்யர், ரமன்தீப், ரஸல் மற்றும் ராணா என பல அதிரடி பேட்ஸ்மேன்கள் வரிசைகட்டுகின்றனர். பந்துவீச்சிலும் மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா மற்றும் வருண் சக்ரவர்த்தி என மேட்ச் வின்னர்கள் இடம்பெற்றுள்ளனர். பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் உடன் சரியான கலவையில் ஆல்-ரவுண்டர்கள் என, கொல்கத்தா அணி வலுவான பிளேயிங் லெவன் கட்டமைப்பை கொண்டுள்ளது. பெரும்பாலான போட்டிகளில் கூட்டு முயற்சியில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணியின் பெரும் பலமாகும்.
மறுமுனையில் ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், கிளாசென் மற்றும் நிதிஷ் ரெட்டி என அதிரடி பேட்ஸ்மேன்கள் காத்திருக்கின்றனர். இவர்களை சமாளிப்பது கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். ஆனால், அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினால், பின்கள வீரர்கள் ரன் சேர்க்க தடுமாறுவதை ஏற்கனவே காண முடிந்தது. பந்துவீச்சில் நடராஜன், புவனேஷ்வர் குமார், பேட் கம்மின்ஸ் என ஆகச்சிறந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனாலும், பல போட்டிகளில் இந்த வீரர்கள் ரன்களை வாரி வழங்கியதை காண முடிந்தது. எனவே இன்றைய போட்டியில் வெல்ல, ஐதராபாத் அணி மிகுந்த கட்டுக்கோப்புடன் பந்துவீச வேண்டியுள்ளது.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணி 17 முறையும், ஐதராபாத் அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன.நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியிலும், கொல்கத்தா அணியே வெற்றி பெற்றுள்ளது. ஐதராபாத் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி ஒரு போட்டியில் அதிகபட்சமாக 208 ரன்களையும், குறைந்தபட்சமாக 101 ரன்களையும் சேர்த்துள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிராக ஐதராபாத் அணி ஒரு போட்டியில் அதிகபட்சமாக 228 ரன்களையும், குறைந்தபட்சமாக 115 ரன்களையும் சேர்த்துள்ளது.
நரேந்திர மோடி மைதானம் எப்படி?
நரேந்திர மோடி மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சமமான சூழலை வழங்குகிறது. மேற்பரப்பு பேட்டர்களுக்கு உதவியை வழங்கும் அதே வேளையில், அவர்கள் எளிதாக ரன்களை சேர்க்க அனுமதிக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வேகம் மற்றும் பவுன்ஸ் வாய்ப்புகளையும் வழங்குகிறது. இங்கு விளையாடிய கடைசி ஐந்து ஆட்டங்களில், சேஸிங்கைத் தேர்ந்தெடுத்த அணிகள் எல்லா சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச அணி விவரங்கள்:
கொல்கத்தா: ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி
ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, சன்வீர் சிங், பாட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே