ஐபிஎல் ரசிகர்களிடம் ”ஐபிஎல் தொடரிலே ஜாம்பவான் பெயர்களைச் சொல்லுங்கள்” என்று கேள்வி எழுப்பினால் அதில் பெரும்பான்மையானவர்களின் முதல் தேர்வு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பெயர்தான் இருக்கும். இதற்கு காரணம் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வென்ற 5 கோப்பைகளுக்காகவா என்றால், அதனைக் கடந்தும் பல காரணங்கள் உள்ளது. அதில் முதல் காரணம் தோனியின் நிதானம். 17ஆண்டுகளாக தோனி ஐபிஎல் விளையாடி வருகின்றார்.
இதில் தோனி கோபப்பட்ட தருணங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதேபோல், 2023ஆம் ஆண்டு கோப்பையை வென்ற பின்னர் ஜடேஜாவை ஆரத்தழுவி, அவரைத் தூக்கி அழுதார். இதனை அனைத்து கேமராக்களும் உலகிற்கு காட்டியது. ஆனால் 2016 மற்றும் 2017ஆம் ஆண்டில் சென்னை அணி நிர்வாகத்தினைச் சேர்ந்தவர் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதால், சென்னை அணிக்கு தடை விதித்தது ஐபிஎல் நிர்வாகம். அதன் பின்னர் 2018ஆம் ஆண்டு சென்னை அணி மீண்டும் ஐபிஎல் தொடருக்குள் களமிறங்கியபோது சென்னை அணி வீரர்கள் மத்தியில் பேசுகையில் தோனி கண்கலங்கியதாக ரெய்னா கூறினார்.
இதுபோன்று பல செயல்பாடுகள் மூலம் தோனி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் என்பதைவிட தனக்கான அரியாசனத்தை உருவாக்கிக்கொண்டார் என்றே கூறவேண்டும். மற்ற அணிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்கள் கூட தோனிக்காக சென்னை அணிக்கும் ஆதரவு தெரிவிப்பார்கள். இப்படியான நிலையில்தான் ஐபிஎல் தொடரில் இருந்து தோனி ஓய்வு பெறவுள்ளதாக பல தகவல்கள் இன்றுவரை சமூக வலைதளங்களில் தொடங்கி செய்தி ஊடகங்கள் வரை அனைத்திலும் வெளியானது.
இதுதொடர்பான கேள்வி தோனியிடம் கேட்கப்பட்டபோது அவர் இறுதியாக கூறிய பதில், “நான் எனது கடைசி ஐபிஎல் போட்டியை சென்னையில் விளையாட நினைக்கின்றேன். சென்னை அணி ரசிகர்களுக்கு நன்றி தெரிப்பதற்கு அதைவிட சிறந்த இடம் எதுவும் இருக்காது” என 2023ஆம் ஆண்டில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த ஆண்டு முதல் போட்டியில் சென்னை அணி பெங்களூருக்கு எதிராக களமிறங்கியது. அந்த போட்டிதான் தோனியின் கடைசி போட்டி என ரசிகர்கள் கருதினர். ஆனால் தோனி இந்த சீசன் முழுவதும் அணியின் நிலையை மனதில் கொண்டு தனது காலில் ஏற்பட்ட தசைநார் கிழிவைக் கூட பொருட்படுத்தாமல் விளையாடினார். தோனி களமிறங்கிய போட்டிகளில் தோனியின் அதிதீவிரமான ரசிகர்கள் அணியின் வெற்றியைக் கூட மனதில் கொள்ளாமல், தோனியின் ஆட்டத்திற்காக மைதானத்தையே அலறவிட்டனர். ஆனால் தோனி சிறப்பாக விளையாடி பவுண்டரி மற்றும் சிக்ஸரில் ரன்கள் குவிப்பதில் கவனமாக இருந்தார்.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் சென்னை அணி 17 ரன்கள் சேர்த்தால் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலையில் இருந்தபோது, களத்தில் தோனி இருந்ததால் சென்னை அணியின் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது கிட்டத்தட்ட உறுதி என பல வர்ணனையாளர்கள் கூறினர். ஆனால் அட்டத்தின் முடிவு பெங்களூருக்கு சாதகமாக மாறியது.
சென்னை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியதால், சென்னை அணி நிர்வாகத்திடம் தோனி ஒன்றை மட்டும் சொல்லிவிட்டு ராஞ்சிக்கு கிளம்பியுள்ளார். அதாவது ”தனக்கு இரண்டு மாதங்கள் மட்டும் கால அவகாசம் கொடுங்கள், அதற்குள் தனது முடிவை உங்களிடம் கூறி விடுகின்றேன்” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் சென்னை அணி அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் குறைந்தபட்சம் இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை வாங்க நேரிடலாம் எனவும் கூறப்படுகின்றது. இந்த தகவல் தல தோனியின் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்தாலும், தன்னால் முடிந்த அனைத்தையும் செய்த தோனிக்கு நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.