KKR Vs SRH, IPL 2024 Final: இன்னும் சற்று நேரத்தில் பைனல்! ஐ.பி.எல். 2024 மகுடம் யாருக்கு? கொல்கத்தா - ஐதராபாத் இன்று பலப்பரீட்சை!

KKR Vs SRH, IPL 2024 Final: நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில், கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன.

Continues below advertisement

KKR Vs SRH, IPL 2024 Final: கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ள ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Continues below advertisement

ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி:

கடந்த மார்ச் மாதம் இறுதியில் 10 அணிகளுடன் தொடங்கிய ஐபிஎல் தொடர், சர்வதே கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. 70 லீக் போட்டிகளின், ஒரு எலிமினேட்டர் மற்றும் 2 தகுதிச் சுற்றுக போட்டிகளின் முடிவில், சிறந்த இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.  அதன்படி, நடப்பாண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார் என்பதை உறுதி செய்யும் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோத உள்ளன.

கொல்கத்தா Vs ஐதராபாத் மோதல்:

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள, எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. கொல்கத்தா அணி லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்ததோடு, முதல் தகுதிச்சுற்று போட்டியிலேயே ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதே உத்வேகத்தில் இன்றைய போட்டியிலும் வென்று, மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல தீவிரம் காட்டி வருகிறது.  மறுமுனையில் ஐதராபாத் அணியோ, முதல் தகுதிச்சுற்று போட்டியில் தோல்வியுற்றாலும், இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. லீக் சுற்று மற்றும் தகுதிச்சுற்று என இரண்டிலும் நடப்பு தொடரில், கொல்கத்தா அணியிடம் தோல்வியையே சந்தித்துள்ளது. அந்த தோல்விகளுக்கு பழிவாங்கும் விதமாக இன்றைய போட்டியில் வென்று, இரண்டாவது முறையாக கோப்பையை வெல்ல ஐதராபாத் அணி களமாட உள்ளது. இதனால் இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

பலம், பலவீனங்கள்:

கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் சுனில் நரைன், ரஹ்மனுல்லா குர்பாஸ், ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் அய்யர், ரமன்தீப், ரஸல் மற்றும் ராணா என பல அதிரடி பேட்ஸ்மேன்கள் வரிசைகட்டுகின்றனர். பந்துவீச்சிலும் மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா மற்றும் வருண் சக்ரவர்த்தி என மேட்ச் வின்னர்கள் இடம்பெற்றுள்ளனர். பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் உடன் சரியான கலவையில் ஆல்-ரவுண்டர்கள் என, கொல்கத்தா அணி வலுவான பிளேயிங் லெவன் கட்டமைப்பை கொண்டுள்ளது. பெரும்பாலான போட்டிகளில் கூட்டு முயற்சியில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணியின் பெரும் பலமாகும். நடப்பு தொடரில் ஏற்கனவே இரண்டு முறை ஐதராபாத்தை வீழ்த்தி இருப்பது, கொல்கத்தா அணியை மனதளவில் வலுவடைய செய்துள்ளது.

மறுமுனையில் ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், கிளாசென் மற்றும் நிதிஷ் ரெட்டி என அதிரடி பேட்ஸ்மேன்கள் காத்திருக்கின்றனர். இவர்களை சமாளிப்பது கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். ஆனால், அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினால், பின்கள வீரர்கள் ரன் சேர்க்க தடுமாறுவதை இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியிலும் காண முடிந்தது. பந்துவீச்சில் நடராஜன், புவனேஷ்வர் குமார், பேட் கம்மின்ஸ் என ஆகச்சிறந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனாலும், பல போட்டிகளில் இந்த வீரர்கள் ரன்களை வாரி வழங்கியதை காண முடிந்தது. சரியான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை என்ற விமர்சனம் இருந்தபோதிலும், பகுதி நேர சுழற்பந்துவீச்சாளர்களை கொண்டே கடந்த போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தியுள்ளது.  அந்த போட்டியும் சென்னையில் நடைபெற்றதால், அதில் கிடைத்த அனுபவம் இன்றைய போட்டிக்கு உதவும் என ஐதராபாத் அணி நம்புகிறது.

நேருக்கு நேர்:

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணி 18 முறையும், ஐதராபாத் அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன.  ஐதராபாத் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி ஒரு போட்டியில் அதிகபட்சமாக 208 ரன்களையும், குறைந்தபட்சமாக 101 ரன்களையும் சேர்த்துள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிராக ஐதராபாத் அணி ஒரு போட்டியில் அதிகபட்சமாக 228 ரன்களையும், குறைந்தபட்சமாக 115 ரன்களையும் சேர்த்துள்ளது.

சேப்பாக்கம் மைதானம் எப்படி?

சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானம், வழக்கமாக சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக  அமையும். 160+ என்ற இலக்கை சேஸ் செய்வது என்பதே கடினமானதாகவே இருக்கும். ஆனால், நடப்பாண்டில் பேட்டிங் சற்று எளிதானதாகவே காணப்படுகிறது. இதனால், பேட்ஸ்மேன்கள் சேப்பாக்கம் மைதானத்திலும் அதிரடியாக ரன்களை குவித்துள்ளனர். இதனால், இன்றைய இறுதிப்போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன் குவிக்க வாய்ப்புள்ளது. 

உத்தேச அணி விவரங்கள்:

கொல்கத்தா: ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி

ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, சன்வீர் சிங், பாட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே

Continues below advertisement