Hardik Natasa: தனது சொத்துகள் அனைத்தும் தாயின் பெயரிலேயே இருப்பதாகவும், எதிர்காலத்தில் யாருக்கும் அதில் பங்கு வழங்க வேண்டியதில்லை என்றும் ஹர்திக் பேசிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


ஹர்திக் - நடாஷா விவாகரத்து?


இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, தனது மனைவி நடாஷா ஸ்டான்கோவிச்சிடம் இருந்து விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அப்படி நடந்தால், தனது சொத்தில் 70 சதவிகித பங்கை, மனைவிக்கு கொடுக்க வேண்டி இருக்கும் எனவும் சில செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளன. சமூக வலைதளங்களில் கணவரின் பெயரை நீக்கியது, ஹர்திக் உடன் இருப்பதை போன்ற புகைப்படங்களை நீக்கியது போன்ற, நடாஷாவின் செயல்பாடுகள் விவாகரத்து வதந்திகள் பரவ காரணமாகியுள்ளன. இது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான், ஹர்திக் மற்றும் நடாஷ தொடர்பான இரண்டு வீடியோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.






நடாஷா சொல்வது என்ன?


விவாகரத்து செய்திகளுக்கு மத்தியில் அலெக்சாண்டர் எனும் தனது ஆண் நண்பருடன், நடாஷா முதல்முறையாக பொதுவெளியில் தோன்றியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த நபர் பாலிவுட் நடிகை திஷா படானியை டேட்டிங் செய்வதாக பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், தற்போது நடாஷாவுடன் பொதுவெளியில் தோன்றியுள்ளார். அப்போது, ஹர்திக்கை நீங்கள் பிரிகிறீர்களா? என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், அதற்கு பதில் எதுவும் அளிக்காத நடாஷா அமைதியாக அங்கிருந்து கிளம்பியுள்ளார். அதேநேரம், தனது சமூக வலைதளத்தில், போக்குவரத்து விதிகள் அடங்கிய புகைப்படத்துடன் யாரோ ஒருவர் தெருவை அடைய உள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவுக்கு பலரும் நடாஷாவை விமர்ச்த்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஹர்திக் பாண்ட்யா ஏமாற்றப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் ஆருடம் தெரிவித்து வருகின்றனர்.






சொத்தில் யாருக்கும் பங்கு இல்லை - ஹர்திக்:


இதனிடையே, தனது சொத்துகள் தொடர்பாக ஹர்திக் பாண்ட்யா பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு அளித்த நேர்காணல் ஒன்றில் பேசிய வீடியோவில்,உங்கள் கணக்குகள் அனைத்திலும் நான் பங்குதாரராக இருக்க விரும்புகிறேன் என்று எனது அம்மா கூறினார்கள்.  அதனால் எனது எல்லா வங்கிக் கணக்குகளிலும் என் அம்மாவின் பெயர் இருக்கிறது. கார் முதல் வீடு வரை அனைத்திலும் அவரும் பங்குதாரராக உள்ளார். என்னையே நான் நம்புவதில்லை. எனவே என் பெயரில் எதையும் வாங்கமாட்டேன். எதிர்காலத்தில் யாரோ ஒருவருக்கு எனது சொத்தில் 50% கொடுக்க விரும்பவில்லை.  எது நடந்தாலும்  சொத்துகளை இழக்காமல் இருக்க 50% உங்களுடன் வைத்திருப்பது நல்லது என்று நான் எனது தாயிடம் சொன்னேன்” என ஹர்திக் பாண்ட்யா பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக, இதுதான் குஜராத் மூளை என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.