ஐபிஎல் தொடரின் 53 வது லீக் போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. கொல்கத்தா அணி தனது முந்தைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
அதேபோல், பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முந்தைய போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஷிகர் தவான் தலைமையிலான அணி 10 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 7 வது இடத்தில் உள்ளது. இரு அணிகளுக்கும் இன்னும் தலா நான்கு போட்டிகள் உள்ளன. இரு அணிகளும் போட்டியின் பிளே ஆஃப்களுக்கு தகுதிபெற முடிந்தவரை போராடும்.
பிட்ச் அறிக்கை:
நடப்பு சீசனில் ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடிய நான்கு போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் மூன்றில் வெற்றிபெற்றுள்ளது. அதேபோல், அந்த மூன்று முறையும் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 200க்கு மேல் குவித்துள்ளன. அதேசமயம் இந்த சீசனில் இதுவரை முதல் இன்னிங்ஸ் மொத்தமாக 211 ஆக உள்ளது. எனவே இன்றைய போட்டியிலும் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யும்.
கணிக்கப்பட்ட அணி விவரம்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR):
ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி
பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்):
பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சாம் குர்ரான், ஷாருக் கான், ஹர்ப்ரீத் பிரார், ரிஷி தவான், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்
இன்று யார் கை ஓங்கும்?
லியாம் லிவிங்ஸ்டோன்:
பஞ்சாப் அணியை சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டோன் 163.54 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஐந்து இன்னிங்ஸ்களில் 157 ரன்கள் எடுத்துள்ளார். இவர் மும்பை அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் 42 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். அதேபோல், சிஎஸ்கே அணிக்கு எதிராகவும் 24 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார். இதையடுத்து, இன்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக செயல்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
வருண் சக்ரவர்த்தி:
நடப்பு சீசனில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் வருண் சக்ரவர்த்தி 10 ஆட்டங்களில் 14 விக்கெட்டுகள் எடுத்து முன்னணியில் உள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எதிரான போட்டியில் 1/20 என்ற மேட்ச்-வின்னிங் கொடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். இது இந்த சீசனில் இவருக்கு இரண்டாவது ஆட்ட நாயகன் விருதாகும். பஞ்சாப் அணிக்கு எதிராக சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டி கணிப்பு : முதலில் பேட்டிங் செய்யும் அணி வெற்றிபெறும்.