Pathirana in IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் பந்து வீச்சாளர் பத்திரனா இலங்கை அணியின் பெரிய சொத்தாக இருப்பார் என தோனி கூறியுள்ளார். 


ஐபிஎல் போட்டியில் பணப்புழக்கம் என்னதான் அதிகமாக இருந்தாலும் இளம் வீரர்களை அடையாளப்படுத்தி அவர்களை சர்வதேச போட்டிகளில் களமிறங்குவதற்கான மிகப்பெரிய பாலமாக உள்ளது. ஐபிஎல் போட்டியினால் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள் பலர் உள்ளனர். அவ்வகையில் சென்னை அணியின் இளம் நட்சத்திரமாக உள்ள பத்திரனா தனது சிறந்த பந்து வீச்சினால் எதிரணியினரை திணறவைப்பதுடன் விக்கெட்டுகளையும் அள்ளுகிறார். 


இவரது பந்து வீச்சு இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மலிங்காவின் பந்து வீச்சினைப்போல் உள்ளது என பலரும் கூறிவருகின்றனர். இதற்கு ஏற்றது போல் மலிங்கா ஐபிஎல் போட்டிகளில் பந்து வீசியதையும் பத்திரனா பந்து வீசுவதையும் தொலைக்காட்சிகளில் ஒப்பிட்டு விவாதங்கள் நடத்தி வருகின்றனர். யார்க்கர்களை துல்லியமாக வீசும் இவரது பந்து வீச்சில் ரன்கள் எடுக்க பேட்ஸ்மேன்கள் திணறுகின்றனர் என்றே கூறவேண்டும். கடந்த ஆண்டே சென்னை அணிக்காக விளையாடிய பத்திரனா, இந்த ஆண்டு தான் மிகவும் கவனிக்கப்படும் வீரராக உள்ளார். இதுவரைப் 7 போட்டிகளில் விளையாடியுள்ள பத்திரனா 10 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அதேபோல் 27.2 ஓவர்கள் பந்து வீசி 208 ரன்கள் மட்டும் தான் விட்டுக்கொடுத்துள்ளார். மிகச்சிறப்பாக பந்து வீசும் பத்திரனா குறித்து பலர் தங்களது கருத்துகளை கூறி வந்த நிலையில், மும்பை அணிக்கு எதிரான போட்டியை வென்ற பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மனம் திறந்துள்ளார். 


அவர் கூறியதாவது, ”என்னுடைய தனிப்பட்ட அறிவுரை என்றால், பத்திரனா சிறப்பாக பந்து வீசுகிறார். அவர் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் போகவே கூடாது. அவர் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடினாலே போதும். அவரை இன்னும் சிறப்பாக தயார் செய்ய வேண்டும். வரும் காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய சொத்தாக இருப்பார்” எனக் கூறியுள்ளார். 


அதேபோல் பத்திரனா, “ சென்னை அணி நிர்வாகம் எனக்கு நிறைய அனுபவத்தை கொடுக்கிறது. அதற்கு மிகவும் நன்றி. சென்னை அணியில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என கூறியுள்ளார். 


இதற்கு முன்னர் இந்திய அணியில் நீண்டகாலமாக இடம் கிடைக்காமல் இருந்த ராஹானே சென்னை அணியில் விளையாட தொடங்கிய பின்னர் உலக் டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இதற்கு தோனியின் மிகச்சரியான தேர்வு மற்றும் அவர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்ததால் தான் என பலரும் கூறிவருகினறனர்.