KKR vs CSK, IPL 2023:ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.  கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி  பந்து வீச முடிவு செய்துள்ளது. 


நேருக்கு நேர்:


ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 17 முறையும், கொல்கத்தா அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவும் எதுவும் எட்டப்படவில்லை. கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில், சென்னை அணி மூன்றிலும், கொல்கத்தா இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது.


ஈடன் கார்டன் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 9 போட்டிகளில், சென்னை அணி 5 போட்டிகளிலும், கொல்கத்தா அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானங்களில் இதுவரை 80 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்த அணி 33 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் 47 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில், கொல்கத்தா அணி வெற்றியை பதிவு செய்தது. 


சென்னை அணி நிலவரம்:


நடப்பு தொடரில் சென்னை அணி இதுவரை 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் நீடிக்கிறது. தோனி தலைமையிலான அணியில் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே, ரகானே, ஷிவம் துபே ஆகியோர் தொடர்ந்து பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஜடேஜா, மொயின் அலி ஆல்ரவுண்டர்களாக அசத்த, பதிரனா மற்றும் துஷார் பாண்டே ஆகியோர்  வேகப்பந்துவீச்சில் நம்பிக்கை அளித்து வருகின்றனர். காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடாத பென் ஸ்டோக்ஸ் இன்று களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எளிமையாக வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.


கொல்கத்தா அணி நிலவரம்:


நடப்பு தொடரில் கொல்கத்தா அணி 6 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டும் வென்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. அடுத்தடுத்து வெற்றி பெற்ற கொல்கத்தா அணி, கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. நிதிஷ் ராணா, வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங் போன்ற தரமான பேட்ஸ்மேன்கள் மற்றும் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி மற்றும் பெர்கூசன் போன்ற தரமான பந்துவீச்சாளர்கள் இருந்தும், அவர்கள் நிலையான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தாதே கொல்கத்தாவின் தோல்விக்கு காரணமாக உள்ளது. உள்ளூர் போட்டியில் வென்று தொடர் தோல்விகளுக்கு முடிவு கட்ட கொல்கத்தா அணி தயாராக உள்ளது.