கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்துள்ளது.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற 33வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியி எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களான டேவன் கான்வே, ருத்ராஜ் கெய்க்வாட் இருவரும் முதல் இரு ஓவர்கள் நிதானமாக ஆடினர். அதன்பின்னர் தங்கள் வழக்கமான அதிரடி ஆட்டத்தை காட்ட கொல்கத்தா அணி வீரர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் திணறினர். பவர்ப்ளே முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து அணியின் ஸ்கோர் 71 ரன்களாக உயர்ந்த போது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ருத்ராஜ் கெய்க்வாட் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் சிறப்பாக ஆடி வந்த டெவன் கான்வே 56 ரன்களில் வெளியேறினார். அவர் இந்த தொடரில் தொடர்ச்சியாக அடித்த 4வது அரைசதம் இதுவாகும். இதன் பின்னர் களம் கண்ட ரஹானேவும், ஷிவம் துபேவும் கொல்கத்தா பந்து வீச்சை பிரித்து மேய்ந்தனர். நாலாபுறமும் சிக்ஸர், பவுண்டரிகளாக பறக்க சென்னை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் கொல்கத்தா பந்து வீச்சாளர்கள் திணறினர்.
21 பந்துகளை சந்தித்த ஷிவம் துபே 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் மாஸ் காட்டிய அஜிங்யா ரஹானே பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 71 ரன்களை விளாசினார். ஜடேஜா 18 ரன்களும், கேப்டன் தோனி 2 ரன்களும் எடுக்க சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்துள்ளது. கொல்கத்தா அணி தரப்பில் குல்வந்த் கெஜ்ரோலியா 2 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி மற்றும் சுயாஷ் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதுவே இந்த ஐபிஎல் தொடரில் எடுக்கப்பட்ட அதிகப்பட்ச ஸ்கோர் ஆகும். இதனைத் தொடர்ந்து கொல்கத்தா அணி 120 பந்துகளில் 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது.