17வது சீசன் ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது சொந்த மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்தது. குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து இமாலய இலக்கை நிர்ணயம் செய்வார்கள் என எதிர்ப்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. டெல்லி அணியின் அட்டகாசமான பந்து வீச்சினாலும் மிரட்டலான பீல்டிங்கினாலும் குஜராத் அணி தொடக்கம் முதல் சரிவைச் சந்தித்தது. இதனால் குஜராத் அணி 17.3 ஓவர்கள் முடிவில் 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இலக்கைத் துரத்திய டெல்லி
90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி அணி 90 ரன்கள் என்ற இலக்கை எளிதில் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குஜராத் அணியினர் சிறப்பாக பந்து வீசி நெருக்கடி கொடுக்கவேண்டும் என களமிறங்கியதால், டெல்லி அணியால் 90 ரன்களை சுலபமாக எட்டமுடியவில்லை.
டெல்லி அணி களமிறங்கி ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் தொடக்க வீரர் மெக்கர்க் விக்கெட்டினை இழந்தது. அடுத்த ஓவரில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷாவின் விக்கெட்டினை இழந்தது. ஆனால் அதன் பின்னர் இணைந்த இம்பேக்ட் ப்ளேயர் போரல் மற்றும் ஷாய் கோப் கூட்டணி சிறப்பாக விளையாடியது மட்டும் இல்லாமல், அணியின் வெற்றியை எளிதாக்கவும் உதவினர்.
அடுத்தடுத்து ஷாக் கொடுத்த குஜராத்
ஐந்தாவது ஓவரின் கடைசி பந்தில் போரல் தனது விக்கெட்டினை இழந்து வெளியேற, பவர்ப்ளேவின் கடைசி ஓவரில் ஷாய் கோப் தனது விக்கெட்டினை இழந்தார். இதனால் குஜராத் அணியால் டெல்லி அணியின் வெற்றியை ஒத்திவைக்க முடிந்ததே தவிர, தடுக்க முடியவில்லை.
டெல்லி வெற்றி
இறுதியில் டெல்லி அணி 8.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இதனால் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் இருந்த டெல்லி அணி தற்போது 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.