கடந்த ஐபிஎல் தொடரில் ஏழாம் இடத்தை பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இந்த ஆண்டு எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ளது. 


சிக்கலில் கொல்கத்தா அணி:


கடந்தாண்டு ஏலத்தின்போது கேகேஆர் அணி ஷர்துல் தாக்கூர், லாக்கி பெர்கூசன், ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த குர்பாஸ், ஷகிப் அல் ஹாசன், டேவிட் வைஸ் மற்றும் நாராயணன் ஜெகதீசன் போன்ற முக்கிய வீரர்களை எடுத்தது. 


இதன்மூலம் இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி , இந்தாண்டு பலமிக்க அணியாக திகழ்ந்து ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். மேலும், கோப்பையை வெல்லவும் அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறி வருகின்றனர். 


ராணா தலைமை:


கேகேஆர் அணிக்கு மிகவும் பின்னடைவு என்றால் ஷ்ரேயாஸ் ஐயரின் காயம் மட்டுமே. கொல்கத்தா அணியின் முழுநேர கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் முதுகில் ஏற்பட்ட காயத்தால், தொடரில் இருந்து விலகினார். எனவே, ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாததால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி, இளம் வீரர் நிதிஷ் ராணாவை கேப்டனாக நியமித்து விளையாடி வருகிறது.


கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ஐபிஎல் 2023ஆம் ஆண்டுக்கான லீக் ஆட்டங்களை தொடங்கியது. இந்த ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை அணி தோல்வியை தழுவியது.


ஷ்ரேயாஸ் ஐயருக்கு மாற்று வீரரை கொல்கத்தா அணி அறிவிக்காமல் இருந்த நிலையில், தற்போது அதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


மாற்று வீரர் அறிவிப்பு:


ஸ்ரேயாஸ்-க்கு பதிலாக இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் வாங்கப்பட்டுள்ளதாக கொல்கத்தா அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இங்கிலாந்தின் அதிரடி தொடக்க வீரரான இவர் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து உலகக்கோப்பை வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.


இதுவரை 64 போட்டிகளில் விளையாடி 1522 ரன்களை 137.62 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2017, 2018 ஆகிய ஐபிஎல் சீசன்களில் டெல்லி அணிக்காக விளையாடிய இவர் கடைசியாக 2021 சீசனில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியிருந்தார்.


அந்த வரிசையில் கடந்த ஆண்டு குஜராத் அணிக்கு விளையாட தேர்வான இவர் குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்பியதால் கடைசி நேரத்தில் வெளியேறினார். அந்த நிலையில் 2023 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் 1.5 கோடி அடிப்படை விலையில் பங்கேற்ற அவரை எந்த அணியும் வாங்கவில்லை.


இருப்பினும் தற்போது காயமடைந்த தங்களுக்கு கேப்டனுக்கு பதிலாக ஜேசன் ராய் 2.8 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாக கொல்கத்தா நிர்வாகம் அறிவித்துள்ளது.