ஐ.பி.எல் மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சன்ரைசர்ஸ் அணி வெளியிட்டிருக்கும் பட்டியல் கொஞ்சம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


சன்ரைசர்ஸ் அணி மொத்தம் 3 வீரர்களை தக்க வைத்துள்ளது. முதல் வீரராக அந்த அணியின் கேப்டனான வில்லியம்சன் தக்க வைக்கப்பட்டுள்ளார். அடுத்த இரண்டு வீரர்களாக அப்துல் சமத்தும் உம்ரான் மாலிக்கும் தக்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இதுதான் ஆச்சர்யமே. இருவரும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள். சமத்திற்கு 20 வயதும் உம்ரான் மாலிக்கிற்கு 22 வயதுமே ஆகிறது. இருவருக்கும் பெரிய அனுபவமோ ரெக்கார்டோ இல்லை ஆனாலும் சன்ரைசர்ஸ் அணி தலா 4 கோடி கொடுத்து இருவரையும் தக்க வைத்துள்ளது.






நடந்து முடிந்த சீசனில் கொரோனா காரணமாக நடராஜன் குவாரண்டைனில் இருந்த போது அவருக்கு பதிலாக நெட் பௌலராக இருந்த உம்ரான் மாலிக்கை ரீப்ளேஸ்மெண்ட் வீரராக அணிக்குள் கொண்டு வந்தனர். மூன்றே மூன்று போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார். இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். ஆனால், இவரது வேகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கொல்கத்தாவிற்கு எதிரான முதல் போட்டியிலேயே 150+ கி.மீ க்கு மேலாக வீசி ஆச்சரியப்படுத்தினார். பெங்களூருவிற்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் இதே வேகத்தை தொடர்ந்தார். அதுமட்டுமில்லை 153 கி.மீ வேகத்துக்கு ஒரு பந்தை வீசி அந்த சீசனின் வேகமான பந்து என்ற ரெக்கார்டையும் வைத்தார். இந்த வேகம்தான் அவரது பலமான விஷயமாக அமைந்தது. வக்கார் யுனிஸுடன் இவரை ஒப்பிட்டு பல முன்னாள் வீரர்களும் பாராட்டியிருந்தனர். இந்தியாவில் இதே மாதிரி Raw Pace இல் வீசும் வீரர்கள் ரொம்பவே குறைவு. அதிலும் சமீபமாக இவ்வளவு வேகத்தில் எந்த இந்திய பௌலரும் வீசியிருக்கவில்லை. ஐ.பி.எல் லிலுமே வேகப்பந்து வீச்சாளர்கள் எல்லாரும் ஸ்லோயர் ஒன்களாகவே வீசிக்கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் உம்ரானின் இந்த அதீத வேகம் அனைவரையும் கவர்ந்தது. உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு நெட் பௌலராகவும் அழைத்து செல்லப்பட்டார். அந்த 150+ கி.மீ வேகமே உம்ரான் மாலிக்கை ரீட்டெயின் செய்ய வைத்தது.


இன்னொரு வீரர் அப்துல் சமத். இவரையும் 4 கோடி ரூபாய் கொடுத்து சன்ரைசர்ஸ் ரீட்டெயின் செய்திருக்கிறது. கடந்த சில சீசன்களாகவே சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். பெரிய இன்னிங்ஸ்கள் எதுவும் ஆடியதில்லை. அவர் ஆடியதில்லை என்பதை விட அதற்கான வாய்ப்பை சன்ரைசர்ஸ் அணி முறையாக கொடுத்ததில்லை. கிடைத்த சில வாய்ப்புகளில் தன்னை ஒரு அதிரடி ஆட்டக்காரராக சிறப்பாக அடையாளப்படுத்திக் கொண்டார். பும்ரா, கம்மின்ஸ், நோர்கியா, ரபாடா என ஐ.பி.எல் அபாயகரமான பௌலர்கள் அத்தனை பேருக்கு எதிராகவும் சிக்சர்களை பறக்கவிட்டிருக்கிறார். இளம் வயது தோனியை போல வலுவாக அடிக்கும் திறன் வாய்ந்த வீரராக இருக்கிறார். பார்ட் டைம் ஸ்பின்னராகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனாலயே சமத்தை சன்ரைசர்ஸ் தக்க வைத்திருக்கிறது.



இந்த இருவருமே ஜம்மு காஷ்மீரை சேத்ந்தவர்கள் என்பது கூடுதல் சுவாரஸ்யமான விஷயம். சில ஆண்டுகளுக்கு முன்பு ஜம்மு காஷ்மீர் அணிக்காக வீரர் மற்றும் பயிற்சியாளராக இர்ஃபான் பதான் ஒப்பந்தம் ஆனார். திறன் வாய்ந்த இளம் வீரர்களை தேடிப்பிடித்து அவர்களுக்கான முறையான வாய்ப்பை உருவாக்கி கொடுப்பதையே பிரதானமான வேலையாக வைத்திருந்தார். பயிற்சிகளின் போது எதாவது இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் அவர்களை வீடியோ எடுத்து, தன்னோடு ஆடிய முன்னாள் வீரர்கள், பயிற்சியாளர்கள், ஐ.பி.எல் அணியினர்கள் என அனைவருக்கும் அனுப்பி வைப்பார். அப்படித்தான் அப்துல் சமத்தையும் உம்ரான் மாலிக்கையும் கண்டெடுத்து வி.வி.எஸ்.லெக்ஷ்மணிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார். சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இருக்கும் லெக்ஷ்மண் அவர்களை ட்ரையல்ஸுக்கு அழைத்து ஆட வைத்து சன்ரைசர்ஸ் அணியோடு இணைத்துக் கொண்டார். அங்கிருந்தே இவர்களின் பயணம் தொடங்கியது. இப்போது பெரிய பெரிய நட்சத்திர வீரர்களுடன் சேர்ந்து இவர்களின் பெயரும் இணைந்து வெளியாகியிருக்கிறது.