IPL Final 2025: ஐபிஎல் தொடரில் இன்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக செல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் குவாலிஃபயர் 1 போட்டியில் இன்று ஆர்சிபி - பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பஞ்சாப்பை சுருட்டிய ஆர்சிபி:

அவரது முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்தது. காயம் காரணமாக கடந்த போட்டிகளில் ஆடாமல் இருந்த ஹேசில்வுட் இன்று மீண்டும் களமிறங்கினார். யஷ் தயாள், ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, புவனேஷ்வர் என மாறி, மாறி பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்த 101 ரன்களுக்கு பஞ்சாப் சுருண்டது. இதையடுத்து, 102 ரன்கள் என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது.

பிரித்தெடுத்த பில் சால்ட்:

ஆர்சிபி அணிக்காக பில் சால்ட் - விராட் கோலி ஆட்டத்தை தொடங்கினார். சால்ட் - கோலி பவுண்டரிகளாக விளாசினர். அதேசமயம், மைதானம் பந்துவீச்சுக்கு சற்று ஒத்துழைத்ததால் ஓரிரு ரன்களாகவும் எடுத்தனர். ஜேமிசன் வீசிய 4வது ஓவரில் 12 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்து விராட் கோலி அவுட்டானார். அந்த ஓவரில் ஜேமிசனும், அடுத்த ஓவரில் ஓமர்சாயும் வேகத்தால் ஆர்சிபி அணியை அச்சுறுத்த முயற்சித்தனர்.

ஆனால், பில் சால்ட் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி ஆட்டத்தை முழுவதும் ஆர்சிபி வசம் கொண்டு வந்தார். அவருக்கு மயங்க் அகர்வாலும் ஒத்துழைப்பு அளித்தார். இந்த ஜோடி முழுவதும் ஆர்சிபி இறுதிப்போட்டிக்கு செல்வதை உறுதி செய்த நிலையில் நன்றாக ஆடிய மயங்க் அகர்வால் 13 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 19 ரன்கள் எடுத்து முஷீர்கான் சுழலில் அவுட்டானார். 

இறுதிப்போட்டியில் ஆர்சிபி:

ஆர்சிபி வெற்றிக்கு 17 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் பில் சால்ட்டுடன் கேப்டன் ரஜத் படிதார் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய பில் சால்ட் அரைசதம் விளாசினார். கடைசியில் கேப்டன் ரஜத் படிதார் சிக்ஸர் விளாசி ஆர்சிபி அணி இலக்கை அடைய வைத்தார். பில் சால்ட் ஆட்டமிழக்காமல் 27 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 56 ரன்களுடனும், கேப்டன் ரஜத் படிதார் 8 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை எட்டிய ஆர்சிபி அணி முதல் அணியாக அகமதாபாத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 10 வருடங்களுக்கு பிறகு ஆர்சிபி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

முன்னதாக, பஞ்சாப் அணிக்காக ஆட்டத்தை தொடங்கிய பிரியன்ஷ் ஆர்யாவை யஷ் தயாள் அவுட்டாக்க, அடுத்த ஓவரில் மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரனை 18 ரன்களில் புவனேஷ்வர் அவுட்டாக்கினார். அடுத்தடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரையும், இங்கிலிஷையும் ஹேசில்வுட் காலி செய்தார். 38 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணிக்காக ஸ்டோய்னிஸ் அதிரடி காட்ட முயற்சிக்க சுயாஷ் சர்மா பின்வரிசையை காலி செய்தார்.

குவாலிஃபயர் 2ல் பஞ்சாப்:

அவர் ஸ்டோய்னிஸ், சுயாஷ் சர்மா, முஷீர்கான் ஆகியோரை அவுட்டாக்க மொத்த பஞ்சாப்பும் சுருண்டது. பஞ்சாப்பை வீழ்த்தி 10 வருடங்களுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள ஆர்சிபி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இது 4வது முறையாகும். 

இந்த போட்டியில் தோல்வி அடைந்த பஞ்சாப் அணி அகமதாபாத்தில் நடக்கும் குவாலிஃபயர் 2ம் போட்டியில் ஆட உள்ளது. எலிமினேட்டர் போட்டியில் குஜராத் - மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் அவர்கள் மோத உள்ளனர். அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஆர்சிபி-யுடன் இறுதிப்போட்டியில் மோதும்.