ஐபிஎல் தொடரின் 18வது சீசனில் இன்று குவாலிஃபயர் 1ம் போட்டி நடக்கிறது. புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் அணியும், 2ம் இடம் பிடித்த ஆர்சிபி அணியும் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
கேப்டனாக கம்பேக் கொடுத்த ரஜத் படிதார்:
இந்த போட்டியில் ஆர்சிபி அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக கேப்டன் ரஜத் படிதார் திரும்பியுள்ளார். அவர் மீண்டும் கேப்டனாக திரும்பியிருப்பதும், கேப்டன்சியை அவர் மீண்டும் கையில் எடுத்திருப்பதும் ஆர்சிபி அணிக்கு பலமாக உள்ளது. ஏனென்றால் கடந்த இரு போட்டியில் அவருக்கு பதிலாக கேப்டன்சியை கையில் எடுத்த ஜிதேஷ் சர்மா சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோற்றாலும், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது.
கேப்டன்சி திறமை:
ஜிதேஷ் சர்மா கேப்டன்சியின்போது பந்துவீச்சில் சில இடங்களில் தடுமாறினார். இதனால், கேப்டன்சிக்கு ரஜத் படிதார் மீண்டும் திரும்ப வேண்டியது அவசியமாக இருந்தது. இந்த சூழலில். ரஜத் படிதார் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இது ஆர்சிபி ரசிகர்களுக்கும், அணிக்கும் உத்வேகம் அளித்துள்ளது. ஏனென்றால் சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற அணிகளுக்கு எதிராக அவர் பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதமே ஆர்சிபி அணியை வெற்றி பெற வைத்தது.
வேகப்புயல் ஹேசில்வுட்:
முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ள ரஜத் படிதாருக்கு பக்கபலமாக அணியில் ஹேசில்வுட் இணைந்துள்ளார். இது ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதற்கு முக்கிய காரணங்களில் ஒருவர் ஹேசில்வுட்.
டிம் டேவிட் மிஸ்ஸிங்:
அதேசமயம், ஆர்சிபி அணிக்கு பின்னடைவாக டிம் டேவிட் இன்னும் காயத்தில் இருந்து மீளவில்லை. இதனால், அவருக்கு பதிலாக இன்றும் லிவிங்ஸ்டனே களத்தில் இறங்குகிறார். லிவிங்ஸ்டன் இந்த தொடரின் பின்பாதியில் பெரியளவு பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. கடந்த போட்டியிலும் அவர் டக் அவுட்டானார். இதனால், இன்று அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
டிம் டேவிட் இல்லாவிட்டாலும் கேப்டனாக ரஜத் படிதார் திரும்பியிருப்பதும், ஹேசில்வுட் மீண்டும் அணிக்குள் வந்திருப்பதும் ஆர்சிபிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற சூழலில் நடக்கும் இந்த போட்டியில் ஆர்சிபி அணி தனது முழு பலத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். அதேசமயம் ஆர்சிபி அணியைப் போலவே 18 ஆண்டுகள் கோப்பை கனவுடன் களமிறங்கியுள்ள பஞ்சாப் அணியும் இறுதிப்போட்டி ஆசையுடன் முழு பலத்துடன் களமிறங்கியுள்ளது.
ப்ளேயிங் லெவன்:
விராட் கோலி, பில் சால்ட், ரஜத் படிதார், லிவிங்ஸ்டன், ஜிதேஷ்சர்மா, ஷெப்பர்ட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யஷ் தயாள், ஹேசில்வுட், சுயாஷ்சர்மா. இம்பேக்ட் வீரராக மயங்க் அகர்வால் உள்ளே வர வாய்ப்பு உள்ளது.