பெங்களூரு அணி பவுலகர்களின் சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணி 101 ரன்களுக்கு சுருண்டது. இதனால், 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி களமிறங்க உள்ளது பெங்களுரு அணி.
அகமதாபாத்துக்கு பொட்டியை கட்டும் பஞ்சாப்:
நியூ சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இந்த போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் ராஜத் பட்டிதார் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கமே பேரிடியாக அமைந்தது. தொடக்க வீரர்கள் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர்.
பெங்களூரு அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பஞ்சாப் அணி நிலைகுலைந்தது. ஜோஷ் இங்கிலிஸ், ஷ்ரேயாஸ் ஐயர், நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ் என அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.
மிரட்டி எடுத்த ஆர்சிபி பவுலர்கள்:
இறுதியில், 14.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பஞ்சாப் அணி வெறும் 101 ரன்களை மட்டுமே எடுத்தது. பெங்களூரு அணியின் சார்பில் ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். யாஷ் தயாள் 2 விக்கெட்டுகளையும் புவனேஷ்வர் குமார், ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனால், 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி களமிறங்க உள்ளது பெங்களுரு அணி.
கடந்த 2008ம் ஆண்டு அறிமுகமானது முதல் ஐபிஎல் போட்டிகளில் இடம்பெற்றுள்ள 8 அணிகளில் ராயல் சேலஞ்சர் பெங்களூருவும் ஒன்று. இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாவிட்டாலும், விராட் கோலி எனும் ஜாம்பவானின் இருப்பு காரணமாக அதிகப்படியான ரசிகர்களை கொண்ட அணிகளில் ஒன்றாக திகழ்கிறது.
நீண்டகால காத்திருப்புக்குப் பிறகு, நடப்பாண்டு கோப்பையை வெல்வதற்கான அனைத்து சாதகமான சூழல்களையும் பெங்களூரு பெற்றுள்ளது. இதனால் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற 18 ஆண்டுகால காத்திருப்பு நடப்பு சீசனில் முடிவுக்கு வருமா? என ஒட்டுமொத்த ஆர்சிபி ரசிகர்களும் காத்திருக்கின்றனர். அதற்கு ஏற்றார் போல் இன்றைய போட்டி அமைந்திருக்கிறது.
இதையும் படிக்க: RCB: கேப்டன் படிதார் இஸ் பேக்.. உள்ளே வந்த ஹேசில்வுட்! ஆனால் டிம் டேவிட்.. ஆர்சிபியில் இன்று நடப்பது என்ன?