IPL 2025 MI vs PBKS Qualifier 2: ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியுடன் மோதப்போகும் அணி யார்? என்பதை தீர்மானிக்கும் குவாலிஃபயர் 2ல் பஞ்சாப் - மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் தோல்வி அடையும் அணி தொடரை விட்டு வெளியேறும் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இந்த போட்டி தொடங்கியது. 

அதிரடி காட்டிய பார்ஸ்டோ:

டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆனால், திடீரென மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. இதையடுத்து, 9.45 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. ஆனாலும், 20 ஓவர் போடட்டியாகவே நடந்தது. மும்பை அணிக்காக ரோகித் சர்மா - பார்ஸ்டோ ஆட்டத்தை தொடங்கினர். ரோகித் சர்மா அதிரடியாக ஆட முயற்சித்தார். ஆனால், அவர் 7 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 8 ரன்கள் எடுத்து ஸ்டோய்னிஸ் பந்தில் அவுட்டானார்.

அடுத்து பார்ஸ்டோ - திலக் வர்மா ஜோடி சேர்ந்தனர். திலக் வர்மா நிதானமாக ஆட பார்ஸ்டோ அடித்து ஆடினார். இதனால், ஓவருக்கு 10 ரன்கள் வீதம் வந்தது. வைஷாக் விஜயகுமார் சாதுர்யமாக வீசிய பந்தில் பார்ஸ்டோ விக்கெட் கீப்பர் இங்கிலிஷிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் 24 பந்துகுளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 38 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

மிரட்டிய திலக் - சூர்யா:

அதன்பின்னர், திலக்வர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடிக்கு வைஷாக் விஜயகுமார், சாஹல் பந்துவீச்சில் குடைச்சல் தந்தாலும் இவர்கள் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் அனுப்பினர். இதனால், 10 ஓவர்களில் மும்பை 102 ரன்களை எட்டியது. இந்த ஜோடி ஓவருக்கு ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸரை விளாசியது.

இந்த ஜோடியை சாஹல் தனது சுழலால் பிரித்தார். சாஹல் சுழலில் சிக்கிய சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார்.  பின்னர், திலக் வர்மாவுடன் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்திலே ஜேமிசன் வேகத்தில் திலக் வர்மா அவுட்டானார்.

மிடில் ஆர்டர் பவுலிங் அசத்தல்:

அவர் சிக்ஸருக்கு அடிக்க முயன்ற பந்தை பிரியன்ஷ் ஆர்யா ஓடி வந்து அபாரமாக கேட்ச் பிடித்தார். இதனால், 29 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் திலக் வர்மா 44 ரன்களில் அவுட்டானார். பின்னர், பாண்ட்யா - நமன்தீர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி நிதானமாகவும், ஏதுவான பந்துகளை அடித்தும் ஆடியது. 

204 ரன்கள் இலக்கு:

ஓமர்சாய் வேகத்தில் அதிரடிக்கு மாற முயற்சித்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அவுட்டானார். அவர் 13 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசி கட்டத்தில் நமன்தீர் அதிரடி காட்ட முயற்சித்தார். அவர் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விளாசினார். மெதுவாக பந்துவீசியதால் கடைசி ஓவரில் 5 ஃபீல்டர்களை மட்டுமே வெளியில் நிறுத்தும் சூழலுக்கு பஞ்சாப் சென்றது. ஆனாலும், கடைசியில் அதிரடி காட்டிய நமன்தீர் 18 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 37 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

கடைசியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 203 ரன்களை எடுத்தது. ஜேமிசன் அபாரமாக பந்துவீசி 4 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். சாஹல் 4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 204 ரன்கள் எடுத்தால் பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்குச் செல்லும்.