ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின. இதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் 12, 13-ம் தேதிகளில் இந்த மெகா ஏலம் நடைபெறும் என்பதை ஐபிஎல் தலைவர் ப்ரிஜேஷ் பட்டேல் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ, அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக தங்களுடைய மூன்று வீரர்களையும் தேர்வு செய்து அறிவித்தனர்.
இந்நிலையில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அகமதாபாத் அணிக்கு ‘குஜராத் டைட்டன்ஸ்’ (Gujarat Titans) என பெயரிடப்பட்டுள்ளதாக அந்த அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக, லக்னோ அணியின் பெயர் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் என்பதை அந்த அணி அறிவித்திருந்தது.
அகமதாபாத் அணி சமீபத்தில் ஹர்திக் பாண்ட்யா(15 கோடி), ரஷீத் கான்(15 கோடி), சுப்மன் கில்(8 கோடி) ஆகியோரை ஒப்பந்தம் செய்தது. அத்துடன் அந்த அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய பயிற்சியாளர் கேரி கிறிஸ்டின் நியமிக்கப்பட்டிருந்தார்.
அகமதாபாத் அணியிடம் மீதமுள்ள தொகை
செலவிட்ட தொகை - 38 கோடி
கழிக்கப்பட்ட தொகை - 38 கோடி
மீதமுள்ள தொகை - 52 கோடி
2022 ஐபிஎல் எங்கு நடைபெறும்:
2022 ஐபிஎல் தொடரின் குரூப் போட்டிகள் மும்பையின் வான்கடே மற்றும் பாராபோர்ன் மைதானங்கள் மற்றும் புனேவின் டிஒய் பாட்டீல் மைதானம் மற்றும் எம்சிஏ மைதானம் ஆகிய நான்கு இடங்களில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. எனினும் மைதானங்கள் தொடர்பாக பிசிசிஐ இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் யுஏஇயில் நடைபெற்றது. அதன்பின்னர் 2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. எனினும் அந்தத் தொடரின் பாதியில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. அக்டோபர் மாதம் மீண்டும் ஐபிஎல் தொடர் யுஏஇயில் நடைபெற்றது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இம்முறை புதிதாக இரண்டு அணிகள் களமிறங்க உள்ளதால் 2022 ஐபிஎல் தொடருக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்