ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய யஷஷ்வி ஜெய்ஷ்வால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்:


அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஏற்கனவே ரிஷ்ப் பண்ட், கே.எல். ராகுல் மற்றும் ஸ்ரேயாஷ் அய்யர் ஆகிய நட்சத்திர வீரர்கள் விலகியுள்ளனர். இந்நிலையில் தான் மேலும் ஒரு வீரர் இந்திய அணியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.


ருதுராஜ் கெய்க்வாட்:


ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரருக்கான மாற்று வீரரின் பட்டியலில் இடம்பெற்று இருந்தார். இந்நிலையில், ஜுன் 3 அல்லது 4ம் தேதியில் தனக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும், இதனால் இந்திய அணியுடன் சேர்ந்து இங்கிலாந்திற்கு பயணம் செய்ய முடியாது என்றும், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.


ஜெய்ஷ்வாலுக்கு வாய்ப்பு:


இதையடுத்து இந்திய அணிக்கான மாற்று தொடக்க வீரராக, நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஷ்வி ஜெய்ஷ்வால் அறிவிக்கப்பட்டுள்ளார். அதற்கான பயிற்சியை உடனடியாக தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் 14 லீக் போட்டிகளில் விளையாடிய ஜெய்ஷ்வால் ஒரு சதம் உட்பட, 625 ரன்களை குவித்தார். இருப்பினும், ராஜஸ்தான் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை.


உள்ளூர் போட்டிகளில் அசத்தும் ஜெய்ஷ்வால்:


மும்பையை சேர்ந்த யஷவி ஜெய்ஷ்வால் நடப்பாண்டு துலீப் டிராபி தொடரில் அடுத்தடுத்து இரண்டு இரட்டை சதங்களை அடித்து அசத்தினார்.  அதைதொடர்ந்து, விஜய் டிராபி தொடரில் ஜார்கண்ட் அணிக்கு எதிரான போட்டியில் 154 பந்துகளில் 203 ரன்களை குவித்தார். அதோடு, இரானி கோப்பையில் மத்திய பிரதேச அணிக்கு எதிராகவும் அதிரடியாக ஒரு இரட்டை சதம் விளாசினார். இதனிடையே, சில சதங்களையும் அடித்து அசத்தினார். இந்த அபாரமான ஃபார்மை அப்படியே ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து, மும்பை அணிக்கு எதிராக 62 பந்துகளில் 124 ரன்களை குவித்தார். இந்த நிலையில் தான், இந்திய அணிக்கான மாற்று வீரராக தேர்வாகியுள்லார்.


விரைவில் இங்கிலாந்து:


வரும் 7ம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக விராட் கோலி உள்ளிட்டோர் ஏற்கனவே அங்கு சென்றுள்ளனர். இதையடுத்து, கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்டோருடன் ஜெய்ஷ்வாலும் விரைவில், இங்கிலாந்து புறப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.