ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியை முன்னிட்டு சென்னை மற்றும் மும்பை ரசிகர்களிடையே, சமூகவலைதளங்களில் மோதல் நீடித்து வருகிறது.
சென்னை - குஜராத் மோதல்:
பரபரப்பிற்கு சற்றும் பஞ்சமில்லாமல் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. 70 லீக் போட்டிகள் மற்றும் 3 பிளே-ஆஃப் சுற்று போட்டிகளுக்குப் பிறகு, இன்று இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வென்று கோப்பையை தக்க வைக்க, நடப்பு சாம்பியனான குஜராத் முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரம், இன்றைய போட்டியில் வென்று, அதிகமுறை (5) ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணியின் சாதனையை சமன் செய்ய சென்னை அணி ஆர்வம் காட்டி வருகிறது.
மல்லுக்கட்டும் மும்பை - சென்னை ரசிகர்கள்:
இதனிடையே, வழக்கமாக ஐபிஎல் தொடர் என்றாலே மைதானத்தில் வீரர்கள் மோதிக்கொள்வதை காட்டிலும், சமூக வலைதளங்களில் ரசிகர்களின் மோதல் தான் படுபயங்கரமாக இருக்கும். குறிப்பாக ஐபிஎல் தொடரில் அதிக ஆளுமை செலுத்தி வரும் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி என்றால், சமூக வலைதளங்கள் கருத்து மோதல்களால் பற்றி எரியும். இரு அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியை கட்டுப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. தொடரில் இரு அணிகளில் எது ஒன்று தோற்றாலும், அந்த அணியை கிழித்து தொங்கவிட்டு தான் மற்றொரு அணியின் ரசிகர்கள் அடங்குவர். அதிலும், சென்னை மற்றும் மும்பை அணிகள் நேருக்கு நேர் மோதினால், இதுதொடர்பான செய்திகள் தான் அன்றைய தினம் ஒட்டுமொத்த சமுக வலைதளங்களையே ஆக்கிரமித்து இருக்கும். இதுபோன்ற பெரும் எதிர்பார்ப்புகள் நிலவுவதால் தான், சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி ஐபிஎல் தொடரின் எல்-கிளாசிகோ என வர்ணிக்கப்படுகிறது.
இப்படியும் மோதல்:
இரு அணிகளையும் விமர்சிப்பதற்காகவே குறிப்பிட்ட சில டெம்ப்ளேட்கள் உள்ளன. சென்னை அணியை “ஜெயிலுக்கு சென்று வந்த பறவைகள், மஞ்ச மாக்கான்ஸ், காயப்பட்ட சிங்கம், எதிர்த்து நிக்குறது தோனிமா” என பல்வேறு விதங்களில் மும்பை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதேநேரம், சென்னை ரசிகர்களோ “அம்பானி டா, காசு கொடுத்துட்டான் டா, அம்பயர வாங்கிட்டாங்கா, வடா பாவ், சங்கு சக்கரம், உன் தோல்வியை ஊரே கொண்டாடுகிறது என்றால்” என மும்பையை வெச்சு செய்வது உண்டு. இதனிடையே, ஐபிஎல் வரலாற்றில் தங்கள் அணிகள் சாதித்ததை வைத்தும் இருவரும் கடுமையாக மோதி வருகின்றனர். ( அதேநேரம், பெங்களூரு அணி ரசிகர்கள் சண்டைக்கு வந்தால் மட்டும், சென்னை மற்றும் மும்பை அணி ரசிகர்கள் ஜோடி சேர்ந்து அவர்களை அடிப்பது தனிக்கதை)
சென்னை சாதிக்குமா? சறுக்குமா?..
இந்த நிலையில் தான், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை அணி களமிறங்குகிறது. எதிர்த்து குஜராத் அணி களமிறங்கினாலும், சமூக வலைதளங்களில் அதை யாரும் கண்டுகொள்வதில்லை என்பது தான் உண்மை. காரணம் மும்பை மற்றும் சென்னை ரசிகர்கள் இடையே நிலவும் அந்த மீம்ஸ் மோதல் தான். தொடரிலிருந்து வெளியேறிய மும்பை அணியை ஏற்கனவே சென்னை ரசிகர்கள் பதம் பார்த்து விட்டார். இந்த சூழலில் இன்று சென்னை அணி ஒருவேளை அணி தோற்றுவிட்டால், மும்பை ஆர்மி சென்னை ரசிகர்களை பழிக்குப் பழி வாங்கி நையப்புடைப்பதை நம்மால் பார்க்க முடியும். அதேநேரம், ஒரு வேளை இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றுவிட்டால், மஞ்சள் படையினர் மும்பை அணி ரசிகர்களை மொத்தமாக தூக்கி சாப்ப்ட்டு விட்டுதான் மறுவேளை செய்வார். இதனால் இன்றைய போட்டியின் முடிவு எப்படி அமைந்தாலும், சமூக வலைதலங்கள் மீம்ஸ் போர் வெடிப்பது உறுதி.