ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் மோதப்போகும் அணி யார் என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று போட்டி இன்று  அதாவது மே மாதம் 26ஆம் தேதி நடந்தது. இதில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் வெற்றி பெறும் அணி வரும் 28ஆம் தேதி இறுதிப் போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்ளும். இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்தது. 


மழை


போட்டி நடைபெறும் அகமாதாபாத்தில் மழை குறுக்கிட்டதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஆனது. இதனால் டாஸ் மற்றும் போட்டி குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை. 


குஜராத் அணியின் இன்னிங்ஸை வழக்கம் போல் விரத்திமான் சாஹா மற்றும் சுப்மன் கில் தொடங்கினர். இவர்கள் இருவரும் சிறப்பாக ஆட, குஜராத் அணி சீராக ரன்கள் சேர்த்தது. முதல் ஒவரில் மட்டும் நிதானமாக ஆடிய குஜராத் அணி அதன் பின்னர் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகளை விரட்டத்தொடங்கியது. இதனால் குஜராத் அணி பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் சேர்த்தது. 


அதன் பின்னர் 7வது ஓவரை வீச வந்த பியூஷ் சாவ்லாவிடம் சாஹா தனது விக்கெட்டை வைடு பந்தில் இழந்து வெளியேறினார்.  அதன் பின்னர் அதிரடி ஆட்டம் ஆடிய கில் சதம் விளாசினார். அதன் பின்னர் அவர் தனது விக்கெட்டை இழந்தார். கில் மட்டும் களத்தில் இருந்திருந்தால் குஜராத் அணி எளிதில் 250 ரன்களைக் கடந்திருக்கும். இறுதியில் குஜராத் அணி 3 விக்கெட்டை இழந்து 233 ரன்கள் சேர்த்தது.  குஜராத் அணி சார்பில் கில் மட்டும் 60 பந்தில் 129 ரன்கள் சேர்த்திருந்தார். இவர் மட்டும் 7 பவுண்டரி 10 சிக்ஸர் விளாசினார். 


அதன்பின்னர் களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. மிடில் ஆர்டரில் க்ரீன், திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆட மும்பை அணிக்கு அவ்வப்போது நம்பிக்கை அளித்து வந்தனர். குறிப்பாக அரைசதம் கடந்து சிறப்பாக ஆடிவந்த சூர்யகுமார் யாதவ் மோகித் சர்மா வீசிய ஸ்லோயர் பந்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அதன் பின்னர் வந்த டிம் டேவிட் 2 ரன்கள் சேர்த்த நிலையில் ரஷித் கான் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறியதால் மும்பை அணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் தோல்வி வித்தியாசத்தைத்தான் குறைக்க முயற்சித்தார்கள். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளைடும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த அணி வரும் 28ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. குஜராத் அணி சார்பில் மோகித் சர்மா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.