லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், நேற்று இரவு தனது அனல் பறக்கும் பந்துவீச்சினால் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இந்த 21 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே இந்த சீசனின் அதிவேக பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுமட்டுமின்றி ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக பந்து வீசிய டாப் 5 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மயங்க் யாதவ் இடம்பிடித்துள்ளார். மேலும், மயங்க் யாதவ் தான் வீசிய 4 ஓவர்களில் மொத்தம் 9 முறை 150 கி.மீ. மேல் பந்துகளை வீசி எதிரணிகளை திணற வைத்தார். 


சிறப்பான அறிமுகம்:


மயங்க் யாதவ் தனது ஐபிஎல் வரலாற்றின் முதல் பந்தை 147.1 கி.மீ வேகத்தில் வீசினார். மேலும், மூன்றாவது பந்தை 150  கி. மீ வேகத்திற்கு கொண்டு சென்றார். முதல் ஓவரில் அவரால் விக்கெட் எதுவும் எடுக்க முடியவில்லை என்றாலும், தனது வேகத்தால் அசத்தினார். தொடர்ந்து, தனது இரண்டாவது ஓவரை வீசிய மயங்க் யாதவ், முதல் பந்திலேயே ஐபிஎல் 2024ன் வேகமான பந்தை வீசிய சாதனையை படைத்தார். மயங்க் யாதவின் இந்த பந்து மணிக்கு 155.8 கி.மீ வேகத்தில் ஷிகர் தவானை வேகமாக கடந்து சென்றது. 






இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அபந்துவீசிய டாப் 5 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மயங்க் யாதவ் இடம்பிடித்துள்ளார். மேலும்,  ஐபிஎல் தொடரில் மணிக்கு 155 கி.மீ வேகத்தில் பந்து வீசிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 


ஐபிஎல் வரலாற்றில் மிகமேகமாக பந்துவீசிய பந்துவீச்சாளர்கள்: 



  1. ஷான் டைட் 157.71 kmph - 2011

  2. லாக்கி பெர்குசன் 157.3 kmph - 2022

  3. உம்ரான் மாலிக் 157 kmph - 2022

  4. அன்ரிச் நோர்கியா 156.22 kmph - 2020

  5. உம்ரான் மாலிக் 156 kmph - 2022

  6. மயங்க் யாதவ் 155.8 kmph - 2024


மயங்க் யாதவின் அறிமுக ஆட்டத்தில் வீசப்பட்ட ஓவர் (வேகம்-KMPH):



  • முதல் ஓவர்- 147, 146, 150, 141, 149, 147

  • இரண்டாவது ஓவர்- 156, 150, 142, 144 (w), 153, 149

  • மூன்றாவது ஓவர்- 150,147 (147, 147 w), 146, 144, 143

  • நான்காவது ஓவர் – 153, 154, 149, 142 (w), 152, 148 


ஐபிஎல் 2024ல் வீசப்பட்ட வேகமான பந்துகள்: 



  1. 155.8 kmph - மயங்க் யாதவ் - LSG vs PBKS

  2. 153.9 kmph - மயங்க் யாதவ் - LSG vs PBKS

  3. 153.4 kmph - மயங்க் யாதவ் - LSG vs PBKS

  4. 153 kmph - நான்ட்ரே பர்கர் - RR vs DC

  5. 152.3 kmph - ஜெரால்ட் கோட்ஸி - MI vs SRH

  6. 151.2 kmph - அல்ஜாரி ஜோசப் - RCB vs KKR

  7. 150.9 kmph - மதீஷா பதிரனா - CSK vs GT


யார் இந்த மயங்க் யாதவ்..?


மயங்க் யாதவ் கடந்த 2022 ஐபிஎல் ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்திற்கு வாங்கப்பட்டார். மயங்க் யாதவ் உள்நாட்டு கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக விளையாடினார். மயங்க் இதுவரை டெல்லி அணிக்காக ஒரு முதல் தர போட்டியில் விளையாடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது தவிடம் மயங்க் 17 லிஸ்ட் - ஏ போட்டிகளில் 34 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 11 டி20 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2023-24 சையத் முஷ்டாக் அலி டிராபியின் அரையிறுதியில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். இருப்பினும், டெல்லி அணி பஞ்சாப் அணியிடம் தோல்வியை சந்தித்தது.