ஐபிஎல் 2024ன் 11வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 199 ரன்கள் எடுத்தது. இந்த ஸ்கோரை சேஸ் செய்ய வந்த பஞ்சாப் கிங்ஸ் அணி ஏற்கனவே 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அந்த நேரத்தில் அனைவரும் பஞ்சாப் கிங்ஸ் அணி 200 ரன்களை எளிதாக எடுத்துவிடும் என்று எண்ணினர்.
அப்போதுதான் 21 வயதான மயங்க் யாதவ் பஞ்சாப் அணியின் வெற்றி வாய்ப்பை தட்டி பறித்தார். ஐபிஎல்-லில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக அறிமுகமான மயங்க் யாதவ் தான் வீச முதல் ஓவரிலேயே தனது வேகத்தால் எதிரணியை மிரள செய்தார். ஐபிஎல்லில் தனது முதல் போட்டியின் முதல் பந்திலேயே 147.1 கி.மீ வேகத்தில் பந்துவீசினார். மேலும், மூன்றாவது பந்தில் மயங்க் 150 கி.மீ வேகத்தை தொட்டார். முதல் ஓவரில் அவரால் விக்கெட் எதையும் எடுக்க முடியாமல் போனாலும், தனது வேகத்தால் அனைவருன் கவனத்தையும் ஈர்த்தார்.
இதன்பிறகு, மயங்க் யாதவ் 12வது ஓவரில் தனது வேகத்தை தொடர்ந்தார். இந்த முறை அவர் முதல் பந்தை 155.8 வேகத்தில் பந்துவீசி 59 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஷிகர் தவானை திணற செய்தார். 2024 ஐபிஎல்லின் வேகமான பந்து இதுவாகும். இந்த ஓவரில், மயங்க் 150 கி.மீ வேகத்தை மொத்தமாக மூன்று முறை கடந்தார்.
சிறப்பான பந்துவீச்சு:
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மயங்க் யாதவ் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்களை எடுத்தது. இந்த பந்துவீச்சுதான் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற உதவியாக இருந்தது. மயங்க் யாதவ் தனது முதல் போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
மயங்க் யாதவ் தனது பந்துவீச்சில் ஜானி பேட்ர்ஸ்ஸ்டோவ், பிரப்சிம்ரன் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகிய மூன்று வீரர்களின் விக்கெட்டை வீழ்த்தினார்.
யார் இந்த மயங்க் யாதவ்..?
21 வயதான மயங்க் யாதவ் டெல்லி அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். உள்நாட்டு போட்டிகளில் கூட தனது வேகமான பந்துவீச்சால் அனைவரது கவனத்தையும் பெற்றார். இதுவரை இவர் 10 டி20 மற்றும் 17 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி மொத்தமாக 46 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
மயங்க் யாதவ் ஐபிஎல் 2022 ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸால் அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்திற்கு வாங்கப்பட்டார். ஐபிஎல் 2023ல் காயம் காரணமாக அவர் போட்டியில் இருந்து விலகினார். அப்போது, பயிற்சி ஆட்டத்தின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இப்போது, நேற்றைய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்து, முதல் போட்டியிலேயே தனது வேகத்தால் மிரள வைத்தார்.