மார்ச் 22ம் தேதி தொடங்கியுள்ள ஐபிஎல் 2024ல் தற்போது வரை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 போட்டிகளில் களமிறங்கி 2லிலும் வெற்றிபெற்றுள்ளது. ஆனால், ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை தவிர வேறு எந்த அணிகளிலும் சொல்லிகொள்ளும் அளவிற்கு எதையும் சிறப்பாக செயல்படவில்லை.


அதிலும் குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கடந்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சொதப்பியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான இந்த தோல்வியால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ரசிகர்கள் வசைப்பாடினார். இந்த  சீசனில் தனது சொந்த மைதானமான எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் தோல்வியை சந்தித்த முதல் அணி என்ற பெருமையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பெற்றுள்ளது. இதுவரை விளையாடிய போட்டிகளில் ஐபிஎல் 2024 சீசனில் எந்த அணி சொந்த ஸ்டேடியத்தில் விளையாடியதோ அந்த அணி வெற்றி பெற்றாலும் பெங்களூரு தோல்வியை பதிவு செய்துள்ளது. 


இப்படி ஒருபக்கம் பெங்களூரு ஆண்கள் அணியை ரசிகர்கள் வசைபாடினாலும், மகளிர் பீரிமியர் லீக்கில் கோப்பையை வென்ற பெங்களூரு மகளிர் அணியின் முழு பெயர் பட்டியலையும் ரசிகர் ஒருவர் தன் கை முழுவதும் பச்சை குத்தியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 






 


அந்த வீடியோவில், கேப்டன் ஸ்மிருதி மந்தனா முதல் அனைத்து 18 வீராங்கனை பெயர்களும் அவரது கைகளில் பச்சையாக குத்தப்பட்டு இருந்தது. மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி கோப்பையை வென்ற நாளான 17.03.2024ம் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 


எப்படி சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமோ அதேபோல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். கிட்டத்தட்ட இந்த அணி அறிமுகமாகி 17 சீசன்கள் கடந்தும் இன்னும் ஒரு கோப்பையை கூட வென்றதில்லை. தற்போது அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி கூட ஒரு முறை கோப்பையை வென்றது. ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இன்னும் கோப்பை கனவு எட்டாகனியாகவே உள்ளது. இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது இரண்டாவது சீசனிலேயே கோப்பையை வென்றது. 






எப்படியாவது ஆண்கள் பெங்களூரு அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஒவ்வொரு ஆர்சிபி ரசிகரும் காத்திருக்கின்றன. எந்த அளவிற்கு பெங்களூரு அணி மீது ரசிகர்கள் தங்களது அன்பை வைத்திருக்கிறார்கள் என்றால், ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் வரை திருமணம் செய்ய மாட்டேன், என் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப மாட்டேன் என்ற வாசகத்துடன் பல ரசிகர்கள் பார்வையாளர்கள் அரங்கில் அமர்ந்திருப்பது அனைத்து சீசன்களிலும் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.