சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே ஐபிஎல் 2024 சீசனில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெளியேறியது குறித்து ட்ரோல் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


ஐபிஎல் 2024ன் எலிமினேட்டர் சுற்றில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதியது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் இந்த தோல்விக்குப் பிறகு, சென்னை வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டார். அதன் பிறகு, அந்த ஸ்டோரி இணையத்தில் அதிவேகமாக வைரலானதை தொடர்ந்து, உடனடியாக பதிவை நீக்கினார். இருப்பினும், அதற்குள் கிரிக்கெட் ரசிகர்கள் அந்த ஸ்டோரியை ஸ்கிரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இதையடுத்து, ஆர்சிபியை ட்ரோல் செய்த துஷார் தேஷ்பாண்டேவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் ஸ்கிரீன் ஷாட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






துஷார் தேஷ்பாண்டே ஸ்டோரி என்ன..? 


துஷார் தேஷ்பாண்டே பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிடாம் ஸ்டோரில் பெங்களூரு கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தின் புகைப்படம் உள்ளது. இந்த புகைப்படத்தில் ‘பெங்களூரு CANT' என்று எழுதப்பட்டுள்ளது. இந்த CANT என்றால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல்லில் எப்போதும் கோப்பையை வெல்ல முடியாது என்று அர்த்தம். இந்த பதிவானது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்தது. அதையே துஷார் தேஷ்பாண்டே தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார். 






துஷார் தேஷ்பாண்டே ஐபிஎல் வாழ்க்கை: 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக துஷார் தேஷ்பாண்டே கடந்த 2022ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். 20 லட்சம் அடிப்படை விலைக்கு துஷார் தேஷ்பாண்டேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. துஷார் தேஷ்பாண்டே இதுவரை 36 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 42 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 


ஐபிஎல்லின் 17வது சீசனிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை. லீக் சுற்றில் தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், இம்முறை எப்படியாவது ஐபிஎல் டைட்டிலை அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்து,  அந்த அணி பட்டம் வெல்வது மீண்டும் கனவாகி போனது. இந்த ஆண்டு கோப்பை வெல்லும் கனவும் கரைந்தது. 


இரண்டாம் தகுதிச் சுற்று: 


வருகின்ற மே 24-ம் தேதி நடைபெறும் இரண்டாவது தகுதிச் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி வருகின்ற மே 26ம் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ளும்.