ஐபிஎல் 2024ம் எலிமினேட்டர் போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். 


இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஜத் பட்டிதார் 34 ரன்களும், விராட் கோலி 33 ரன்களும், லோம்ரோர் 32 ரன்களும் எடுத்திருந்தார். இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் விக்கெட் ஒன்றை நடுவர் நாட் அவுட் என அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


என்ன நடந்தது..? 


ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இன்னிங்ஸின் 15வது ஓவரை அவேஷ் கான் வீசினார். இந்த ஓவரின் இரண்டாவது பந்தில் சிறப்பாக விளையாடி கொண்டிருந்த ரஜத் படிதார் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு மூன்றாவது பந்தை அற்புதமாக அவேஷ் கான் வீச, தினேஷ் கார்த்திக் அதை பேட்டிங்கில் வாங்காமல் தனது கால் பேடில் வாங்கினார். இதனால், கள நடுவர் அதை எம்.பி.டபிள்யூ என அறிவித்தார். இதனால் தினேஷ் கார்த்திக் தனது கடைசி ஐபிஎல் மேட்ச்சில் டக் அவுட் ஆகி வெளியேறுவதாக இருந்தது. இதன் பின்னர், பெங்களூர் அணி டி.ஆர்.எஸ் சென்றது. தினேஷ் கார்த்திக் சிரித்துக்கொண்டே போட்டு பார்ப்போம் என்ற தொனியில் கள நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்தார். 






அப்போது அல்ட்ரா எட்ஜில் ஒரு பெரிய ஸ்பைக் இருப்பதை மூன்றாவது நடுவர் ரீப்ளேயில் பார்த்தார். இதையடுத்து, மூன்றாவது நடுவர் தினேஷ் கார்த்திக்கை நாட் அவுட் என அறிவித்தார். ஆனால், ரீப்ளேவில் பந்து முதலில் பேடில் பட்டது, பேட்டில் அல்ல என்பது தெரிந்தது. இருப்பினும் மூன்றாவது நடுவர் நாட் அவுட் என வழங்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


கோபமடைந்த குமார் சங்கர்கார: 


இதை பார்த்து களத்தில் இருந்த சஞ்சு சாம்சன் உட்பட ராஜஸ்தான் வீரர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மூன்றாவது நடுவர் மீதும் வர்ணனையாளர்கள் கேள்வி எழுப்பினர். நவ்ஜோத் சிங் சித்து அதை ஒரு க்ளீன் அவுட் என்று வர்ணனையின்போது தெரிவித்தார்.  மூன்றாவது நடுவரின் முடிவைப் பார்த்த தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்கர்கார அவரைச் சந்திக்க முயற்சி செய்தார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. 






வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாத தினேஷ் கார்த்திக்: 


அவேஷ் கான் வீசிய 18வது ஓவரில் தினேஷ் கார்த்தில் 13 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதன்பின், அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் அவேஷ் கான் பந்து வீச்சில் , ரோவ்மேன் பவலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் மஹிபால் லோம்ரோர். 






இரண்டாம் தகுதிச் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான்: 


173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவர்கள் முடிவில் இலக்கை துரத்தி வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த சீசனில் இருந்து வெளியேற, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வருகின்ற வெள்ளிக்கிழமை இரண்டாம் தகுதிச் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி மே 26ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ளும்.