கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளர் ஷாருக் கானின் உடல்நிலை, நேற்று முன் தினம் மோசமடைந்த நிலையில், அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், தற்போது ஷாருக் கான் உடல் நிலையில் முன்னேற்றம் கண்டு, டிஜ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


முதல் தகுதிச் சுற்று: 


கடந்த 21ம் தேதி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குவாலிஃபையர் ஒன் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. கொல்கத்தா அணிக்கு தனது முழு ஆதரவை தர வேண்டும் என்று ஷாருக் கான் அன்றைய போட்டியை காண வந்திருந்தார். அந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டி முடிந்ததும் தனியார் ஹோட்டல் ஒன்றில் ஓய்வு எடுக்க சென்ற நடிகர் ஷாருக் கானுக்கு திடீரென உடல் நிலை மோசமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர், உடனடியாக நேற்று காலை அகமதாபாத்தில் உள்ள கேடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், நடிகர் ஷாருக் கானும் கடும் வெயிலின் காரணமாக நீர்ச்சத்து குறைபாடு காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. தற்போது, ஷாருக் கான் முழு உடல்நலம் பெற்று மருத்துவனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது கொல்கத்தா மற்றும் அவரது சினிமா ரசிகர்களிடையே மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. 






கொல்கத்தாவின் ஒவ்வொரு போட்டியை காண வந்த ஷாருக் கான்: 


ஐபிஎல் 2024 சீசன் முழுவதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எங்கெல்லாம் களமிறங்கி விளையாடியதோ, அங்கெல்லாம் ஷாருக் கான் வருகை புரிந்து தங்கள் அணியினரை உற்சாகப்படுத்தினார். அதேபோல், நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று போட்டியில் கூட நடிகர் ஷாருக் கான் தனது மகள் சுஹானா கான் மற்றும் இளைய மகன் ஆப்ராம் கானுடன் நரேந்திர மோடி மைதானத்திற்கு வந்திருந்தார் . கொல்கத்தா வெற்றி பெற்றபோது, ​​கிங் கான் தனது குழந்தைகளுடன் மைதானத்திற்குள் வந்து விளையாடிய ஒவ்வொரு வீரர்களையும் கட்டிபிடித்தும், பார்வையாளர்கள் அரங்கில் இருந்த ரசிகர்களை நோக்கி கையசைத்தும் உற்சாகப்படுத்தினார். 


இறுதிப்போட்டிக்கு வருவாரா ஷாருக் கான்..? 






அகமதாபாத்தில் நிலவிவரும் அதிக வெப்பநிலை காரணமாகவே, நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர்கள் காலை நேரத்தில் பயிற்சியில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், ஷாருக் கான் உடல்நிலையில் தற்போதுதான் முன்னேற்றம் கண்டுள்ளதால், மே 26ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியை ஷாருக்கான் பார்க்க வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது . இறுதிப் போட்டி எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது, அங்கு இறுதிப் போட்டி நடைபெறும் நாளில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். இப்படிப்பட்ட நிலையில், ஷாருக்கின் உடல்நிலையை கருத்தில்கொண்டு இறுதிப் போட்டியை காண சென்னை வரமாட்டார் என்று கூறப்படுகிறது. இருப்பினும், தனது அணியினருக்காகவும், தனது ரசிகர்களுக்காகவும் ஷாருக் கான், சென்னை வந்து ஆதரவு தருவார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.