IPL Mega Auction 2025;  அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரை முன்னிட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளதால், ஒவ்வொரு அணியும் 3-4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும்.


ஐபிஎல் ஏலம்:


ஐபிஎல் 2024 தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில், தற்போதே அடுத்த சீசனுக்கான திட்டமிடலும் தொடங்கியுள்ளது. 2025 ஐபிஎல் தொடரை முன்னிட்டு மெகா ஏலம் நடைபெறவிருப்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதுதொடர்பாக பேசியுள்ள ஐபிஎல் தலைவர் அருண் துமால், ”அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. மேலும் அணி நிர்வாகங்கள் ஏலத்திற்கு முன்பு 3 முதல் 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும். மீதமுள்ள இடங்களுக்கான வீரர்களை ஏலத்தில் மட்டுமே எடுக்க முடியும்” என தெரிவித்துள்ளார். இந்த கருத்தின்பட்,  அனைத்து உரிமையாளர்களும் ஒரு புதிய அணியைக் கட்டமைப்பர், இது போட்டியை மேலும் சுவாரஸ்யமாக்கும்.


”இளைஞர்களுக்கான அவகாசம்” 


தொடர்ந்து பேசுகையில், “மெகா ஏலம் இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து ஏற்கனவே புதிய திறமைகளை அறிமுகப்படுத்தியது போல, இந்த முறையும் பல இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் என நம்புகிறோம். ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளும் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதால் பலனடைந்துள்ளன” என அருண் துமால் தெரிவித்துள்ளார். மெகா ஏலம் நிச்சயமாக நிறைய வீரர்களுக்கு உதவப் போகிறது. இதில் உள்நாட்டு நட்சத்திரங்கள் மட்டுமின்றி,   சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் கூட கோடிகளை வருமானமாக ஈட்டுவார். அதோடு,  எம்எஸ் தோனி தொடர்ந்து விளையாடுவாரா, இல்லையா என்பதையும் ஏலம் மூலம் ரசிகர்கள் உறுதிப்படுதிக் கொள்ளலாம். பல நட்சத்திர வீரர்கள் புதிய அணிக்காக களமிறங்கும் சூழலும் உருவாகலாம்.


3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை..!


ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெறுவது வழக்கம். இதன் மூலம், ஒரு சில நட்சத்திர வீரர்கள் மட்டும் தக்கவைக்கப்பட்டு, மற்றபடி ஒவ்வொரு அணி நிர்வாகமும் ஒரு புதிய அணியை கட்டமைக்கும். அந்த வகையில் அடுத்த ஆண்டும் மெகா ஏலம் நடைபெற உள்ளது. முன்னதாக நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம், கடந்த ஆண்டு இறுதியில் துபாயில் நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியா அணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்ககை, இதுவரை ஐபிஎல் வரலாற்றில் இல்லாத அளவிற்கு 24.75 கோடி ரூபாய்க்கு, கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது. இதையடுத்து நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. முதற்கட்டமாக முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, மற்ற போட்டிகளுக்கான விவரங்கள் வெளியாகும் என ஐபிஎல் நிர்வாகும் தெரிவித்துள்ளது.