ஐ.பி.எல். ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், கடைசி  நேரத்தில் சூர்யவன்ஷி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். 13 வயதே ஆன சூர்யவன்ஷியை ரூபாய் 1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்துள்ளது. அதிரடி பேட்ஸ்மேனான இவர் அசத்தி வருகிறார். 


ஐபிஎல் ஏலம்:


பொதுவாக ஐ.பி.எல். ஏலத்தில் ஒவ்வொரு அணியும் முன்னணி மற்றும் பிரபல வீரர்களை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டுவார்கள். குறிப்பாக, வெளிநாட்டு வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வந்தனர்.


ஆனால், இந்த ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியின் உரிமையாளர்களும் வித்தியாசமான வியூகத்தை கையில் எடுத்தனர். அதாவது, தொடர் முழுவதும் விளையாடும் வீரர்கள், இளம் வீரர்கள் என நீண்ட கால முதலீடாக இந்த முறை வீரர்களைத் தேர்வு செய்தனர். இதனால், ஏராளமான இந்திய வீரர்கள் நல்ல விலைக்கு ஏலம் போனார்கள்.






யார் இந்த சூர்யவன்ஷி?

இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் 13 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷியை ஏலத்தில் எடுத்தது. பீகாரைப் பூர்வீகமாக கொண்ட இவர் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி பிறந்தவர். 13 வயதே ஆன இவர் இடது கை பேட்ஸ்மேன் ஆவார். 19 வயதுக்குட்பட்ட இந்திய பி அணிக்காக ஆடிய பெருமை கொண்டவர்.


ஐபிஎல் வரலாற்றிலே மிக மிக இளம் வயதில் ஏலம் போன வீரர் என்ற பெருமையை சூர்யவன்ஷி படைத்துள்ளார். இவர் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி ஆடியது. அந்த போட்டியில் அவர் வெறும் 62 பந்துகளில் 104 ரன்களை விளாாசினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 58 பந்துகளிலே சதத்தை விளாசினார்.


இந்திய அளவில் மிக இளம் வயதில் சர்வதேச போட்டியில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், சூர்யவன்ஷியின் இந்த சதம் சர்வதேச அளவில் இரண்டாவது இளவயது சதம் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இவரது சதத்தின் மூலம் இவர் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். சூர்யவன்ஷியின் தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி ஒரு கிரிக்கெட் வீரர் ஆவார்.