ஐபிஎல் ஏலத்தில் கே.எல். ராகுலை டெல்லி கேபிடல்ஸ் அணி 14 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. அவரை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் முயற்சி செய்த போதிலும் கடைசியில் டெல்லி அணி அவரை தட்டிச் சென்றது. 


ஐபிஎல் 2025 சீசனில் ஒவ்வொரு அணி சார்பிலும் பங்கேற்க உள்ள வீரர்களுக்கான மெகா ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இரண்டு நாட்கள் நடைபெறும் ஏலத்தில் 577 வீரர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


குறைவான விலையில் ஏலத்தில் சென்ற கே.எல். ராகுல்:


இன்றைய ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கே.எல். ராகுல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தனர். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி 26.75 கோடி ரூபாய்க்கு எடுத்தது. 17 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரிஷப் பண்ட். அவரை லக்னோ அணி 27 கோடி ரூபாய்க்கு வாங்கியது.


இந்த நிலையில், கே.எல். ராகுலை டெல்லி கேபிடல்ஸ் அணி 14 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. அவரை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் முயற்சி செய்த போதிலும் கடைசியில் டெல்லி அணி அவரை தட்டிச் சென்றது. 20 கோடி ரூபாய்க்கு மேல் ஏலத்தில் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அதை விட குறைவான விலையில் அவர் ஏலத்தில் சென்றிருக்கிறார்.


முன்னதாக, ஏலத்தில் முதல் வீரராக சென்ற அர்ஷ்தீப் சிங்கை பஞ்சாப் கிங்ஸ் அணி 18 கோடி ரூபாய்க்கு எடுத்தது. சாஹலை 18 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியும் டேவிட் மில்லரை ரூ.7.5 கோடி லக்னோ அணியும் வாங்கியது.


மற்ற வீரர்களின் விலை நிலவரம்:


முகமது ஷமியை 10 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணியும் மிட்செல் ஸ்டார்கை 11 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு டெல்லி அணியும் வாங்கியது. ஜாஸ் பட்லரை 15 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குஜராத் அணி.


வீரர்களின் அடிப்படை விலை ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.2 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து அதிகபட்சமாக 207 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 


இதையும் படிக்க: Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!