கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள தொடராக உருவெடுத்திருப்பது ஐ.பி.எல். தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகிய இந்திய பிரபல வீரர்களுடன் வெளிநாட்டு பிரபலமான வீரர்களும் விளையாடுவதால் இந்த தொடருக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.
புதிய விக்கெட் கீப்பர்:
ஐ.பி.எல். தொடரில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ். தோனி தலைமையில் 5 கோப்பைகளை வென்ற சி.எஸ்.கே. அணி தங்கள் அணிக்கான புதிய விக்கெட் கீப்பரைத் தேடும் பணியில் இறங்கியுள்ளது.
அந்த அணியின் நட்சத்திர வீரரும், விக்கெட் கீப்பருமான தோனிக்கு தற்போது 44 வயதாகிறது. அவர் நடப்பு ஐ.பி.எல். தொடரில் விளையாடினாலும் அடுத்த தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், அந்த அணியின் புதிய விக்கெட் கீப்பரைத் தேடும் பணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியுள்ளது.
ரிஷப்பண்ட்டா? கே.எல்.ராகுலா?
இன்று நடைபெறும் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கைவசம் ரூபாய் 55 கோடி உள்ளது. 13 இந்திய வீரர்களையும், 7 வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்க இயலும். நடப்பு ஏலத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வீரர்கள் டெல்லி அணிக்கு கேப்டனாக பதவி வகித்துள்ள ரிஷப்பண்ட், லக்னோ அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல், கடந்த ஐ.பி.எல். மகுடத்தை வென்று தந்த கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் ஆவார்கள். இவர்ளை எந்த அணியினர் தங்கள் வசம் இழுக்கப் போகிறார்கள்? என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய விக்கெட் கீப்பர் தேவைப்படுவதால் ரிஷப்பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் இருவரில் ஒருவரை தங்கள் பக்கம் இழுக்க மும்முரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப்பண்ட் இருவரும் கேப்டனாக ஏற்கனவே பொறுப்பேற்றவர்கள் என்பதால், இவர்களை ஏலத்தில் எடுக்கும் பட்சத்தில் கேப்டன்சியை எதிர்பார்ப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அவ்வாறு இருவரில் ஒருவரை ஏலத்தில் எடுத்தால் ருதுராஜிடம் இருந்து கேப்டன்சியை இருவரில் ஒருவருக்கு சென்னை அணி நிர்வாகம் வழங்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த சீசனில் தோனி விக்கெட் கீப்பிங் செய்தாலும் வருங்காலத்திற்காக புதிய மற்றும் இளம் விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் சி.எஸ்.கே.விற்கு ஏற்பட்டுள்ளது.