ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக அனைத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்க வைக்கப் போகிறோம் என்ற பட்டியலை நேற்று வெளியிட்டன. அதில் எந்த வீரருக்கு அதிகபட்ச சம்பளம் அளிக்கப்பட்டது என்பதை இங்கே பார்க்கலாம்.
ஐபிஎல் 2025:
ஐபிஎல் 2025 சீசனுக்கு முன்பாக வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு தங்களது அணிக்கான வீரர்களை தக்கவைப்பதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. அதன்படி, ரிஷப் பண்ட் , கே.எல். ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூன்று கேப்டன்கள் தங்களது அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியோ சூர்யகுமார் யாதவ் , ஜஸ்பிரித் பும்ரா , ரோஹித் ஷர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய நான்கு வீரர்களை தக்கவைத்துள்ளது . அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தல தோனியை தக்கவைத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விராட் கோலியை தக்கவைத்தது. விராட் கோலியை பெங்களூரு அணி தக்கவைக்கும் பட்சத்தில் அவருக்கு கோடிகளை ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கோலியை பின்னுக்குத் தள்ளிய கிளாசன்:
அதேபோல அவருக்கு இந்த முறை 21 கோடி ரூபாய் சம்பளம் அளிக்கப்பட்டது. கடந்த முறை அவரது அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அவருக்கு 18 கோடி சம்பளம் அளித்து இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த சம்பளத்திலேயே விராட் கோலி நீடித்து வந்தார். தற்போது அவருக்கு 21 கோடி ரூபாய் சம்பளமாக அளிக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால், அவரை விட வேறு ஒரு வீரருக்கு அதிக சம்பளம் அளிக்கப்பட்டு இருப்பது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசனுக்கு 23 கோடி சம்பளம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுவே 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒரு வீரரை தக்க வைக்க அளிக்கப்பட்ட அதிக சம்பளம் ஆகும். மேலும், ஐபிஎல் வரலாற்றிலும் ஒரு வீரரை தக்க வைக்க அளிக்கப்பட்ட அதிகபட்ச சம்பளம் இதுவே ஆகும். இந்த முறை தக்க வைக்கப்பட்ட வீரர்களின் சம்பள பட்டியலில் அதிக சம்பளம் பெற்ற முதல் வீரராகவும் கிளாசன் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் விராட் கோலி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.